5,476 ஏக்கர் பிரமாண்ட ஏர்ப்போர்ட் - விஜய்யே களமிறங்கி எதிர்ப்பது ஏன்..? பரந்தூரின் உண்மை நிலை
5,476 ஏக்கர் பிரமாண்ட ஏர்ப்போர்ட் - விஜய்யே களமிறங்கி எதிர்ப்பது ஏன்..? பரந்தூர் பற்றிய இந்த தகவல் தெரியுமா?
சென்னை பரந்தூர் போராட்ட குழுவினருடன் விஜய் சந்தித்திருக்கும் வேளையில், விமான நிலைய திட்டம் குறித்து அரசு சொல்வது என்ன...? மக்கள் எதிர்ப்பு என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமைவெளி விமான நிலையமாக அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இது பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம், தொடூர், ஏகனாபுரம், மகாதேவி மங்கலம், சிங்கிலிபாடி, எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
புதிய விமான நிலையத்துக்காக 5 ஆயிரத்து 476 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதி அளித்திருக்கிறது. தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர் மற்றும் அரசு நிலம் 1,972.17 ஏக்கர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 2,682.62 ஏக்கர் ஈரநிலம் அதாவது நஞ்சை நிலம் மற்றும் 980 ஏக்கர் பரப்பளவு ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகளாக இருக்கிறது. ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையம் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என அரசு தெரிவிக்கிறது.
(அளவில் சிறியதாக இருக்கும் சென்னை விமான நிலையத்தில் வருடத்திற்கு 2 கோடி பயணிகள் வந்து செல்வதாக குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, வருங்காலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும், எனவே பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்றார்.)
பரந்தூர் விமான நிலையம் வருடத்திற்கு 10 கோடி பயணிகளை கையாளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலைய பட்ஜெட் மதிப்பீடு 32,000 கோடி என கடந்த பட்ஜெட்டில் தெரிவித்த தமிழக அரசு, இறுதிக்கட்ட கட்டுமானப் பணி 2046 ஆம் ஆண்டில் நிறைவடையும் என்றது
ஆனால்... விவசாயத்தை சார்ந்த தொழிலை செய்யும் இப்பகுதி கிராம மக்கள், கிராமங்களையும், விவசாய நிலங்களையும் அழித்து விமான நிலையம் வேண்டாம் என்ற ஒற்றை கோரிக்கையில் வலுவாக நிற்கிறார்கள்.
பரந்து கிடக்கும் ஏரிகள்... நெல் வயல்கள்.... என இயற்கையுடன் பின்ணி பினைந்து இனிதாக வாழும் அப்பகுதி மக்களுடைய கேள்வியெல்லாம், இந்த இயற்கையோடு தங்கள் வாழ்வு நகருமா...? என்பதாகவே இருக்கிறது.
எங்கள் மண்ணில் ஒருபோதும் விமான நிலையத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற அவர்களது போராட்டம் 900 நாட்களை தாண்டியுள்ளது.
ஆற்று பாசனம் இல்லாத இப்பகுதியில் பாலாற்று நீரை கொண்டுவந்து 85 ஏரிகளை நிரப்பும் கம்பன் கால்வாய் என்னவாகும் என்ற மக்கள் கேள்விக்கு எந்த பாதிப்பும் வராது என அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. மறுபுறம் ஈரநிலங்கள் எடுக்கப்படுவதால் சுற்றுசூழலுக்கு பெரும் ஆபத்து நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
பரந்தூர் அடையாறு நீர்பிடிப்பு பகுதியாகும், 2015 சென்னை வெள்ளத்தின் போது இங்கிருந்து 3 ஆயிரம் கன மீட்டர் நீர் அடையாற்றுக்கு வந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள். இதுபோக 2030-க்குள் சென்னையின் நிலத்தடி நீரில் 60 சதவீதம், மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வும் எச்சரிக்கிறது.
இதையெல்லாம் சுட்டிக்காட்டும் சுற்றுசூழல் ஆர்வலர்கள், பரந்தூர் விமான நிலைய திட்டம் சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்து, அரசு முயற்சியை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள். இப்போது விஜயின் களவருகையால் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது பரந்தூர் விமான நிலைய போராட்டம்...