வேங்கை வயல் கொடூரம்.. உடைந்த மர்மம்.. அதிர்ச்சியை கிளப்பும் வீடியோ, ஆடியோ - "பற்றி எரியும் சர்ச்சை" - உண்மை குற்றவாளி யார்..?
புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ளது இறையூர் வேங்கை வயல் கிராமம். இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியலினத்தனவர்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் மனித கழிவு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்த அப்போதிருந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இறையூர் வேங்கை வயலுக்கு சென்றிருந்தார். அப்போது தான்
அந்த கிராமத்தில் இரட்டை குவளை முறை, கோவில்லுக்குள் வேறு சமூகத்தினர் செல்ல தடை போன்ற சதீய ஒடுக்கு முறைகள் இருப்பது கண்டறியப்பட்டு அதை களையும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சாதிய வன்மம் நிறைந்த இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளலூர் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டது.
டிஎன்ஏ, குரல் மாதிரி என பல்வேறு சேதனைகளை நடத்தி கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகள் ஆனநிலையில் குற்றவாளிகள் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.
தமிழக வரலாற்றில் வேங்கை வயலும் அந்த ஊரில் இருக்கும் குடிநீர் தொட்டியும் ஒரு சாதிய வன்கொடுமை வடுவாகவே மாறிப்போனது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் , சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் 397 பேரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.196 மொபைல் எண்கள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை உள்ளடக்கிய 87 டவர் தகவல்ககளை பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் அவர்களின் கணவர் முத்தையா என்பவரை கிராமசபைக் கூட்டத்தின் போது, வேங்கைவயல் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் அவமானப்படுத்தியதாகவும், இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் மலம் கலக்கும் செயல் திட்டமிடப்பட்டதாகவும், முத்துகிருஷ்ணனும் சுதர்சனும் தொட்டியின் மீது ஏறி குடிநீரில் மலம் கலந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
டி.என்.ஏ. பரிசோதனை மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ததில், மனிதகழிவு கலந்தது தொடர்பான வீடியோ போட்டோ, ஆடியோ ஆதாரங்கள் மூவரின் செல்போனிலும் இருந்ததாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதில் முரளிராஜா என்பவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த மூவரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
தமிழக அரசின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திட்டமிட்டே பட்டியல் சமூக மக்கள் சிக்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா. ரஞ்சித் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளதோடு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் வேங்கை வயல் சம்பவத்தில் குடிநீரில் மலத்தை கலந்ததாக கூறப்படும் முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோரது ஆடியோக்களும் வீடியோக்களும் அடுத்தடுத்து சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக சுதர்சன் தனது அத்தை மற்றும் தாயுடன் பேசும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திட்டமிட்டு பட்டியல் சமூகத்தினர் சிக்கவைத்ததாக விமர்சணங்கள் எழுந்து வந்த நிலையில், திடீரென வெளியான இந்த ஆடியோ வீடியோ ஆதாரங்கள் மேலும் சந்தேகத்தை ஏற்படுவதாக நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கண்டங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாகவும். இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த மூவரும் உண்மையான குற்றவாளிகள் தானா? அல்லது வழக்கை விரைவில் முடிப்பதற்காக இப்படி ஏற்பாடா ? இல்லை அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக இந்த விவகாரத்தை வைத்து காய் நகர்த்துகிறார்களா என்பதெல்லாம் சிபிஐ விசாரணைக்கு பிறகே தெரியவரும்.