பிச்சை எடுத்து பிழைக்கும் சாமியாரால் தூக்கம் தொலைத்த அரசியல் பிரமுகர்?-வேலூரை நடுங்கவிட்ட புதை சடலம்
பிச்சை எடுத்து பிழைக்கும் சாமியாரால்
தூக்கம் தொலைத்த அரசியல் பிரமுகர்?
வேலூரை நடுங்கவிட்ட புதை சடலம்
கோவில் அடிவாரத்தில் குடியிருந்த சாமியார் கொன்று புதைக்கப்பட்ட நிலையில், அவர் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டது தான் நடந்த பயங்கரத்துக்கு காரணமா? பரபரப்பு பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....
அன்று மலை அடிவாரத்தை சுத்து போட்டிருந்த போலீசார், அதிகாரிகளோடு களத்தில் இறங்கினார்கள்.
பச்சை பசேல் என்று காட்சியளித்த அந்த வயல்வெளியில் இருந்த ஒரு குடிசையை ஆய்வு செய்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது... எதற்காக இந்த பரபரப்பு என்று எட்டி பார்பதற்கு கூட அங்கு வெளியாட்கள் யாரும் இல்லை.
சிறிது நேரத்தில் போலீசார் அங்கு நான்கு பேரை பலத்த பாதுகாப்போடு அழைத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கை காட்டிய இடத்தை மார்க் செய்து தோண்ட தொடங்கியிருக்கிறார்கள். சிறிது நேரத்திலேயே போலீசார் எதை தேடி இங்கு வந்தனரோ அது கிடைத்துவிட்டது.
ஐந்தாறு நாட்களாக அரசல்புரசலாக ஊருக்குள் உலாவிய வதந்தியை, தோண்டி எடுக்கப்பட்ட சடலம் உண்மை என்று முற்றுபுள்ளி வைத்தது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு மலை அடிவாரத்தில் 150க்கும் மேற்பட்ட சாமியார்கள் தங்குவது வழக்கம். அப்படி தங்கியிருந்தவர்களில் ஒருவர் தான் சடலமாக மீட்கப்பட்ட சாமியார் ரவி. 65 வயதான ரவியின் சொந்த ஊர் மதுரை. 10 வருடங்களுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்திருக்கிறார். கோவிலில் யாகசம் கேட்டு பிழைப்பு நடத்தியிருக்கிறார். அவ்வப்போது வயல்வெளிகளுக்கு காவல்காக்கும் வேலையையும் செய்து வந்திருக்கிறார்.
தற்போது ரவி, வள்ளிமலை கோட்டநத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வந்திருக்கிறார்.
வெளி ஆட்களுக்கு சாமியார் என்று ரவி அறியப்பட்டிருந்தாலும். உள்ளூர்காரர்களுக்கு அவர் போலீஸ் இன்பார்மர்.... ஆம்... இந்த பகுதியில் நடக்கும் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசாருக்கு ரவி துப்புக்கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
வழக்கமாக காலையில் ஊருக்குள் இருக்கும் கடைக்கு ரவி டீ குடிக்க செல்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ரவி திடீரென மாயமாகியிருக்கிறார். எங்கு போனார் என்ன ஆனார் என்று எந்த தகவலும் ரவியை பற்றி தெரியாத நிலையில் தான் அந்த அதிர்ச்சி தகவல் மெல்ல மெல்ல ஊருக்குள் பரவ தொடங்கியிருக்கிறது. போலீசாருக்கு துப்பு கொடுத்ததால் சமூக விரோதிகள் அவரை அடித்து கொன்று புதைத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அரசல்புரசலாக பரவிய இந்த தகவல் காவல்நிலையத்தின் கதவை தட்டியிருக்கிறது. உடனே போலீசார் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.
சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், மதன்குமார், லோகேஷ் மற்றும் பிரபு ஆகிய நான்கு பேரை பிடித்து கிடக்குப்பிடி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் தான் இத்தனை நாட்களாக ஊருக்குள் பரவிய அந்த புரளி உண்மை என தெரியவந்திருக்கிறது.
போலீசார் சுற்றி வளைத்திருந்த நால்வரும் கூலித்தொழிலாளிகள். அதில் ஹரிகிருஷ்ணன் என்பவரின் செல்போன் காணாமல் போய்விட்டதாகவும், அதை ரவி திருடியிருக்கலாம் என நினைத்த நால்வரும் அவரை தாக்கிய போது அவர் இறந்ததால், குழி தோண்டி புதைத்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
செல்போன் திருட்டுக்காக ரவியை கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்திருந்தாலும், ஆனால் இந்த கொலைக்கு பின்னால் வேறு சில காரணங்கள் இருப்பதாக ஊருக்குள் பேசிக் கொள்கின்றனர்.
இந்த ஊரின் அரசியல் பிரமுகர் ஒருவர் தொடர் மணல் மற்றும் மண் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், அதை பற்றி ரவி போலீசுக்கு தகவல் கொடுத்ததால் அந்த பிரமுகர், கைது செய்யப்பட்டிருக்கும் நால்வரையும் ஏவி ரவியை கொன்று புதைத்திருக்கலாம் என்றும் ஊருக்குள் ஒரு தகவல் உலா வருகிறது.
போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகே இந்த சம்பவத்தின் உண்மை காரணம் தெரியவரும்.