டிசம்பர் வந்தால் தமிழகமே உச்சரிக்கும் வேள(வெள்ள)ச்சேரிக்கு நிரந்தர தீர்வு

x

மழைக்காலங்களில் வெள்ளச்சேரியாக மாறும் வேளச்சேரியில், இனி மழைநீர் தேங்காத படி நிரந்தரத் தீர்வு காணப்படவுள்ளது. எப்படி சாத்தியம் ? பார்க்கலாம் விரிவாக....

மேகம் கருக்கத் தொடங்கியவுடனே..போட் ரெடியா என வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராகும் வேளச்சேரி மக்களை.... குதூகலிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது இச்செய்தி...

ஆம், மழைக்காலங்களில் வெள்ளச்சேரியாக அறியப்படும் வேளச்சேரியில் இனி மழைநீர் தேங்காத வகையில் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..

வேளச்சேரி - பெருங்குடி இடையே உள்ள 6 Vent Culvert என்ற நீர்வழிப்பாதையை தூர் வாருவதோடு, அதன் முன்புள்ள அரசு நிலங்களில் குளங்கள் அமைக்கப்பட்டு வேளச்சேரி பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...

இக்குளம் கட்டி முடிக்கப்பட்டவுடன் இரு பக்கமும் உள்ள கரைகளை நடைப்பாதை அமைத்து இந்தப் பகுதி ஒரு சுற்றுலா மையமாக உருவெடுக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

அத்துடன், வீராங்கல் ஓடை முழுவதுமாக தூர்வாரப்பட்டுள்ளதால், வேளச்சேரிக்குட்பட்ட கோட்டம் 172,175,176,177 மற்றும் 178 பகுதிகளின் மழைநீர் சீராக சதுப்பு நிலங்களை அடையும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வேக்கு சொந்தமான, எம்.ஆர்.டி.எஸ். சாலை சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையில், இச்சாலை பகுதியிலும் மழைநீர் வடிகால்வாய் தூர்வாருதல் மற்றும் பழுது பார்த்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், MRTS சாலை வடக்கு பகுதியில் அமைந்துள்ள அரசு நிலங்களில் புதிதாக குளம் வெட்டி நீர் தேக்கம் மற்றும் பூங்கா முதலானவைகள் அமைப்பதற்கு 13,800 சதுர மீட்டர் பரப்பளவில் குளம் வெட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்கப்படுவதோடு, டான்சி நகர், பேபி நகர், புவனேஸ்வரி நகர், விஜிபி செல்வா நகர், வீனஸ் காலனி, அன்னை இந்திரா நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பிலிருந்து நிரந்தர தீர்வு காணப்படும்.

இது மட்டுமன்றி, கோடை காலங்களிலும் குளங்கள் முலம் பயன்பெறலாம் என உறுதி தெரிவித்துள்ளார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்...

இந்த புதிய குளத்தால் வெள்ள பாதிப்புக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கும் அப்பகுதிவாசிகள், மாநகராட்சிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்