"வள்ளலார் கண்ட கனவுகள் இவை... 71.24 ஏக்கரில், 3.18 ஏக்கரிலேயே மையம்" உலக தரத்தில் ஒரு பிரமாண்ட அடையாளம் - சர்வதேச மையம் - வசதிகள் என்ன...?
வள்ளலார்....... ஜீவகாருண்யமே... அதாவது அனைத்து உயிரினங்களிடம் இரக்கம் காட்டுவது மோட்சத்துக்கான திறவுகோல் என்றவர் சமரச வேத சன்மார்க்க சங்கத்தை தொடங்கியவர்...
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணைமிக்கவர், பசிப்பிணி தீர்க்க வடலூரில் சத்திய தரும சாலையை நிறுவி அன்னதானம் வழங்கினார்.
இதற்காக அவர் ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்றளவும் எரிகிறது, பலரது பசிப்பிணியை போக்குகிறது. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றவர் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை என, எல்லோருக்கும் பொதுவான கோயிலாம் சத்திய ஞான சபையை நிறுவி அதனுள் ஜோதி வழிபாட்டை கொண்டுவந்தவர். அவரது கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.
அதன்படி திறந்த வெளியான பெருவெளியில் மையம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதில், வள்ளலார் அருளிய இயற்கை வைத்திய தொண்டினை விரிவாக்கம் செய்ய, ஏழை, ஏளிய மக்கள், சுற்றுப்புற மக்கள் பயன்பெறும் வகையில் வைத்திய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகமான மக்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் அன்னாதான கூடம், வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதரவற்ற முதியவர்கள் சுயமரியாதையோடு வாழ்ந்திட முதியோர் இல்லம் அமைக்கவும், வள்ளலார் புத்தகங்கள் அனைத்து மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடவும், மாதாந்திர இதழ் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
சன்மார்க்க வழி செல்லும் சன்மார்க்கிகள் தியானம் செய்ய யோக சாலை அதாவது யோக மண்டபம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் திருஅருட்பா பற்றிய சொற்பொழிவுகள் கருத்தரங்குகள் நிகழும் விவகார சாலை... அதாவது கருத்தரங்கம் கட்ட திட்டமிட்டப்பட்டிருக்கிறது. வள்ளலார் அருங்காட்சியகம், மின் நூலகம், வெளிநாட்டு மாணவர்கள் ஆய்வு செய்ய ஆய்வகம் அமைக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் போது அதற்கு தேவையான கழிப்பறை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளையும் செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது.
இவையெல்லாம் வள்ளலார், சத்திய ஞான சபையில் நிறுவ விரும்பியதே என கூறப்படுகிறது.
உயிர் தழைக்க உணவுச்சாலை, உடல் தழைக்க மருத்துவ சாலை, படித்து பயனுற பாட சாலை, உதவி செய்திட உபகார சாலை, வருவாய் பெருக்கிட விருத்தி சாலை, அருளை அடைந்திட வழிபாட்டுச் சாலை, உள்முகம் நோக்கிட தியான சாலை, மயக்கம் நீங்கிட கருத்தரங்கு சாலை என 8 சாலைகளுக்கு அடிக்கோலிட்டுள்ளார் வள்ளலார். அதில் தருமச்சாலை, உபாசனா சாலை, ஞான சபையையும் வள்ளலார் தொடங்கிவிட்டார்.
வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கூறப்பட்டுள்ள மற்ற சாலைகளை அமைக்கவே அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வள்ளலார் சர்வதேச மையம் அமைவதால் பக்தர்களுக்கு கூடுதல் வசதியே கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. பெருவெளியில் 71.24 ஏக்கரில், 3.18 ஏக்கரிலேயே வள்ளலார் சர்வதேச மையம் அமைவதால் தைபூசத்தில் ஜோதி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்கிறது தமிழக அரசு.