"விஜய்யிடம் நேக்காக போட்டு வாங்கும் புஸ்ஸி ஆனந்த்" - தவெக-வில் புயலை கிளப்பிய புது ஆடியோ

x

விஜய் கட்சி பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு ஆடியோதான் இப்போது தவெகவில் ட்ரெண்டிங். கிட்டத்தட்ட விஜய் தொண்டர்கள் அனைவருக்குமே இந்த ஆடியோ அத்துபடி... அப்படி என்னதான் இருக்கிறது அந்த ஆடியோவில்?

2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் எங்க இலக்கு என்று த.வெ.க. கட்சியை அறிவித்து அரசியலில் வேகம் காட்டுகிறார் விஜய்.

234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்த த.வெ.க., எப்போது வேண்டுமானாலும் மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் அந்த ஆடியோ வேகமாக பரவுகிறது.

தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி செயல்படுகிறார் என கூறப்படுகிறது. இவர் 2016 சட்டப்பேரவை தேர்தலில் பாமகவுக்கும், 2019-ல் மகாராஷ்டிராவில் சரத்பவாருக்கும் வியூக வகுப்பாளராக பணியாற்றியவர்.

தற்போது ஜான் ஆரோக்கியசாமி, த.வெ.க நிர்வாகி ஒருவரிடம் பேசியதாக கூறப்படும் ஆடியோ கிட்டத்தட்ட ஒவ்வொரு தவெக தொண்டரிடமும் போய்ச்சேரத் துவங்கியிருக்கிறது.

அதில், கட்சியில் விஜயைவிட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தே அதீத ஆதிக்கம் செலுத்துகிறார் என ஜான் ஆரோக்கியசாமி பேசுவதாக இருக்கிறது.

புஸ்ஸி ஆனந்த் மீது அந்த ஆடியோவில் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு, தவெக எதிர்பார்த்த அளவுக்கு வாக்கு சதவீதத்தை அடைய முடியாது என அந்த ஆடியோ குரல் ஒலிக்கிறது.

கட்சியில் பொறுப்பாளர்களை நியமிப்பதில் எழும் பிரச்சினைகள் தொடங்கி, ஆனந்த் இல்லாமல் அணுவும் அசையாது என்றும் சொல்கிறது அந்த குரல்.

ஆடியோ பல்வேறு இடங்களில் எடிட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாக சில தவெக நிர்வாகிகள் சொல்ல துவங்கியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் அந்த ஆடியோவில் இருப்பது ஜான் ஆரோக்கியசாமியின் குரல் என்பதையும் உறுதிப் படுத்துகிறார்கள் விஜய் கட்சியினர்.

இந்த ஆடியோ விவகாரம் பற்றி கருத்து கேட்க ஜான் ஆரோக்கியசாமி, மற்றும் புஸ்ஸி ஆனந்தை பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தாலும், தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதே சமயம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த ஆடியோவைப் பற்றி தவெக சார்பில் மறுப்போ விளக்கமோ இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்சியில் பதவி கிடைக்காதவர்கள் யாரோ சிலர் இப்படி ஒரு ஆடியோவை பரப்பி வருகிறார்கள் என்றும் விஜய் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்