நிதி குழுவுக்கு தமிழக அரசின் பரிந்துரைகள் என்னென்ன?
மாநில பேரிடர் மேலாண்மை நிதியினை 2026-27 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 50 சதவீதமாக உயர்த்தி, 90: 10 என்ற அளவில் மத்திய மற்றும் மாநில நிதிப் பங்கீட்டில் வழங்க வேண்டும் என கேட்டுள்ளது. பரிந்துரை காலத்தில் செயல்படுத்துவதற்கான நிதி அளவுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற அளவிலிருந்து 10 சதவீதம் என்ற அளவில் உயர்த்தப்பட வேண்டும்.
கடற்கரையின் நீளம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற வரையறை உள்ளிட்ட புதிய குறியீடுகளுடன் பேரிடர் குறியீடுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நகர்ப்புற வெள்ளம் ரூ. 2500 கோடி, வறட்சி நிவாரணம் ரூ. 2000 கோடி மற்றும் கடலோர மேலாண்மை ரூ.1000 கோடி ஆகியவற்றினை மேற்கொள்ள குறிப்பிட்ட நிதியினை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பகிர்ந்தளிக்கப்படும் மானியம், பகிர்ந்தளிக்கப்படும் வருவாயில் குறைந்தபட்சம் 5 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை வழங்கியது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50:50 என்ற விகிதத்தின் அடிப்படையில் மானியங்களை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையேயான பங்கானது தேசிய சராசரியுடன் கணக்கிடப்பட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளது. மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையேயான பகிர்வானது மாநிலங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரையை வழங்கியுள்ளது.