தமிழகம் வளர்ச்சி கண்டதா? - போட்டு உடைத்த CAG ரிப்போர்ட்
2023 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்ட செயல்பாடுகள், நிதி நிலவரம் குறித்து ஐந்து அறிக்கைகளை சட்டப்பேரவையில் கணக்கு தணிக்கை துறை சமர்ப்பித்தது. அதில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் 33,183 கோடி ரூபாய் செலவழிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி துறையில் 2,816 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சி துறையில் 1,622 கோடி ரூபாயும், நகராட்சி நி்ர்வாகம் - குடிநீ்ர் துறையில் 1,593 கோடி ரூபாயும், ஆதிதிராவிடர் நலத்துறையில் 1,375 கோடி ரூபாயும் செலவு செய்யப்படவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி பெரும் அளவு செலவழிக்கப்பட வேண்டும் என்றும் அப்போது தான் திட்டத்தின் பயன்கள் மக்களை சென்றடையும் என அறிக்கையில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதன்மை கணக்காயர்கள் ஜெய்சங்கர், ஆனந்த் தெரிவித்தனர்.
வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது, மாநில உற்பத்தி திறன் முந்தைய ஆண்டைவிட 14 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது எனவும் தமிழக அரசின் கடன் 2023 மார்ச் இறுதிபடி 6 லட்சத்து 91 ஆயிரத்து 591 கோடியாக இருப்பதாகவும், ஜிடிபியோடு ஒப்பீடுகையில் கடன் கட்டுக்குள் இருப்பதாகவும், இதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.