பயங்கரமாக கோபப்பட்ட CM.. சரிக்கு சரி சண்டை செய்த EPS.. களேபரமான சட்டப்பேரவை
சாத்தனூர் அணை திறப்பு குறித்து சட்டமன்றத்தில் அரங்கேறிய காரசார விவாதம் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதத்தை கிளப்பியது சாத்தனூர் அணை திறப்பு விவகாரம்...
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து நள்ளிரவு நேரத்தில் முறையான அறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன...
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் தேங்கும் தண்ணீர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது...
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், சாத்தனூர் அணை நிரம்பி, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது...
ஆனால், டிசம்பர் 2 அதிகாலை 2.30 மணி அளவில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாகவும், இதனால் ஆற்றின் கரையோரம் இருந்த திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்கள் வெள்ளநீர் புகுந்து பாதிப்புக்கு உள்ளானதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியிருந்தார்...
இந்த குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் எதிரொலிக்க, சாத்தனூர் அணைத் தொடங்கி செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு வரை காரசார விவாதம் அரங்கேறியது...
சட்டப்பேரவையில் பேசிய, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, சாத்தனூர் அணையிலிருந்து நீரை திறக்கும் முன்னதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது எனக் கூறினார்.
இதற்கு விளக்கமளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பொதுமக்களுக்கு முன்கூட்டியே ஐந்து முறை எச்சரிக்கை கொடுத்த பின்பே சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாக கூற, சாத்தனூர் அணையை திறப்பதாக அறிவிப்பு கொடுத்த கால் மணி நேரத்தில் அணையை திறந்து விட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
அத்துடன் விமர்சனங்களும் எழவே தொடர்ந்து அவையில் விவாதமும் சூடு பிடித்தது
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதாக இந்திய கணக்காயர் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டதாக பேசினார்.
தொடர்ந்து விவாதம் அனல்பறக்க, அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், ஆகியோர் பதிலளிக்க சட்டப்பேரவை சூடு பிடித்தது..
இது மட்டுமன்றி 5 முறை எச்சரிக்கை விடுத்த பின்னரே சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் விளக்கமளித்தார்...