அன்று தி.மலை.. இன்று ஸ்ரீரங்கம்.. புண்ணிய பூமிகளில் அசம்பாவிதம்..முதல் வாரத்திலே மிரட்டும் டிசம்பர்

x

அன்று தி.மலை.. இன்று ஸ்ரீரங்கம்.. புண்ணிய பூமிகளில் அசம்பாவிதம்..முதல் வாரத்திலே மிரட்டும் டிசம்பர்

ஸ்ரீரங்கத்தில் மண் சரிவில் சிக்கிய மாநகராட்சி ஊழியரை சுமார் 2 மணி நேரத்திற்கு பின் மீட்ட பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் யாத்ரி நிவாஸ் அருகே குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய, மாநகராட்சி சார்பில், 46 வயதான ஒப்பந்த ஊழியர் செல்வம் என்பவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய, பள்ளம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட மணலில் அதிகப்படியான ஈரப்பதம் இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென மண்சரிவு ஏற்பட்டு, மாநகராட்சி ஊழியர் அதில் சிக்கி 15 அடி ஆழத்தில் புதையுண்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் புதையுண்டவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஈரப்பதம் அதிகப்படியாக இருந்ததால், மணல் சரிந்து செல்வம் புதைந்து கொண்டே இருக்க, அவர் சுவாசிக்க ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தி விட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர் தீயணைப்புத்துறையினர்..

தீயணைப்புத்துறை அதிகாரிகள் மட்டுமன்றி, அங்கு பொதுமக்களும் திரண்டு உதவிக்கரம் நீட்ட, மீட்பு பணி தீவிரமடைந்தது...

சுமார் 2 மணி நேரம் நீடித்த மீட்பு பணியில், ஒருவழியாக போராடி ஊழியர் செல்வத்தை உயிருடன் மீட்டனர் தீயணைப்புத்துறையினர்...

உயிருடன் காப்பாற்றிய உற்சாகத்தில் அனைவரும் மகிழ்ச்சியுற, மீட்கப்பட்ட செல்வத்தை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதிகாரிகள்...

இது தொடர்பாக பேசிய தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், பள்ளத்திற்குள் கால் சிக்கிக் கொண்டதாலேயே மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டதாக விளக்கமளித்தார்..

திருவண்ணாமலை மண் சரிவு சம்பவத்தில் திகிலில் இருந்து மீளாத சூழலில், திருச்சியில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் 2 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்