"இந்த ஊரில் ஒருவர் இறந்தாலும் பெரும்பாடுதான்" - துக்க செய்தியை கேட்டாலே விழிபிதுங்கும் மக்கள்

x

"இந்த ஊரில் ஒருவர் இறந்தாலும் பெரும்பாடுதான்" - துக்க செய்தியை கேட்டாலே விழிபிதுங்கும் மக்கள் - 50 ஆண்டு கால சாபம்

இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல வழியில்லாமல் தத்தளித்து வருகின்றனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள். பின்னணியில் அவர்கள் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு பேசு பொருளாகி இருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராமநாதபுரம் கிராமத்தில்தான் இந்த அவலம்..

சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இந்த கிராமத்தில், இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல வழியின்றி, விவசாய நிலத்தில் இறங்கிச் செல்லும் நிலைக்கு மக்கள் ஆளாகி இருப்பது துக்கத்திலும் பெருந்துயரம்.. இந்த நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் ..

இதனால், பயிர் நிலம் சேதமாவதும், சில சமயம் இறுதி ஊர்வலத்தில் விவசாய நிலத்தின் சகதியில் சிக்கி தாங்கள் காயமடைவதாகவும் குமுறுகின்றனர். இதனிடையே, மயானத்திற்கான சாலையை 9 பேர் ஆக்கிரமித்து இருந்ததாகவும், இதில் 8 பேர் ஆக்கிரமிப்பை அகற்றியதில் ஒருவர் மட்டும் அகற்றாததால் தாங்கள் இவ்வாறு சிரமப்பட்டு வருவதாக மக்கள் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல முறை மாவட்ட ஆட்சியரிடத்தில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் ராமநாதபுரம் கிராம மக்கள்..

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக ஓர் தீர்வு காணும் படி மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி இருக்கின்றனர்.. தந்தி டிவி செய்திகளுக்காக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து செய்தியாளர் நந்தகுமார்.


Next Story

மேலும் செய்திகள்