``இதென்ன புள்ள புடிக்கிற வண்டியா?'' -12 பேரை அள்ளிப்போட்டு சென்ற கார்.. திகில் தந்த டிரைவிங் ஸ்கூல்!
பால்வாடிக் குழந்தைகளைப் போல் ஒருவர் மடிமேல் ஒருவரை அமர வைத்துக் கொண்டு ஏதோ திருவிழாவுக்கு செல்வதைப் போல் இவர்கள் செல்வது நமக்கு யாரடி நீ மோகினி பட காமெடியைத் தான் நினைவூட்டுகிறது...
இதற்குத் தான்...முறையாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சென்று டிரைவிங் கற்றுக் கொண்டிருந்தால், இப்படி போக்குவரத்து விதிகளை எல்லாம் மீறுவார்களா? என்று கேட்கத் தோன்றுகிறதா?... அட.. இது அது இல்லீங்க... அரிசி மூட்டைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு போவதைப் போல் இந்த இளைஞர்களை மொத்தமாக அள்ளிப் போட்டுக் கொண்டு போவதே ஒரு ட்ரைவிங் ஸ்கூல் நிர்வாகம் தான்..
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் செயல்படும் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வாகனத்தில் தான் இப்படி மாணவர்கள் "கதவைத் திற காற்று வரட்டும்" என கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கூலாக காற்று வாங்கிக் கொண்டே கார் ஓட்டக் கற்றுக் கொள்கின்றனர்...
6 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 12 பேர் இருந்ததைக் கூட சகித்துக் கொள்ளலாம்... முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டு ஆசிரியர் வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, சைடில் படிக்கட்டில் அமர்ந்தபடி இந்த 2 இளைஞர்களும் ஹாயாக வேடிக்கை பார்த்தபடி எப்படி டிரைவிங் கற்றுக் கொள்கின்றனர் என்றுதான் புரியவில்லை...
போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என்பது தானே ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றுத்தரப்படும் முதல் பாடமாக இருக்கும்...ஆனால் வேலியே பயிரை மேய்வதைப் போல ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி வாகனமே போக்குவரத்து விதியை மீறி இருப்பது பேசு பொருளாகியுள்ளது..
இது தொடர்பாக தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில், செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் விசாரணையைத் தொடங்கினார்.
அதில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி வாகனத்தை பறிமுதல் செய்து செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான பதில் அளிக்கவில்லை எனில் மூன்று முதல் ஆறு மாதம் வரை ஓட்டுநர் பயிற்சி எடுக்க தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் தெரிவித்தார்.
இந்த ஒரு சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதுபோன்ற விதிமீறல்கள் வேறு எங்கும் நடக்கிறதா? என்பதையும் சோதனை செய்தால் விபத்துகள் தவிர்க்கப்படும்...