வீடு புகுந்து பெண்களை மிரட்டிய தனியார் நிறுவன ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம், வீடு கட்ட கடந்த 2017-ம் ஆண்டு, தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். இந்த நிதி நிறுவனத்தை, கடந்த 2022ம் ஆண்டு மற்றொரு நிதி நிறுவனம் வாங்கியுள்ளது. இதையடுத்து மாற்றப்பட்ட நிர்வாகம் சோமசுந்தரத்தின் வீட்டுக் கடனை மறுசீரமைத்து மாதத் தவணையை 19 ஆயிரத்து 750 ரூபாயாக நிர்ணயித்த நிலையில், அதன்படி சோமசுந்தரம் தவணைத்தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், 3 தவணைகள் செலுத்தத் தவறியதால், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர், சோமசுந்தரத்தின் வீட்டிற்கு வந்து, வீட்டில் இருந்த பெண்களை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டுச் சுவரில் பெயிண்டில் பெரிய எழுத்துகளாக கடனில் உள்ளது என்றும், தவணை கட்ட தவறியதால் சுவாதீனம் செய்வதாகவும் எச்சரிக்கை விடுத்த வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனரை வீட்டின் சுவற்றில் ஒட்டியுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சோமசுந்தரம் தெரிவித்தார்.