பஞ்சு மெத்தை போல்-முள் மீது எகிறி குதித்த சாமியார் நம்பிய பக்தர்களுக்கு நேர்ந்த கதி - ஷாக் சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே, புங்கவர் நத்தம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், அருள் வாக்கு கூறுவதாகவும், பூஜை செய்தால் தொழில் வளம் பெருகுவதுடன், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள், பல லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். தூத்துக்குடி ஏரல் பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் மற்றும் அவரது நண்பர் ஆனந்தகுமார் ஆகியோர், பாலசுப்பிரமணியத்திடம் சுமார் 77 லட்சம் ரூபாயை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை திரும்பக் கேட்டபோது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு குடும்பத்துடன் பாலசுப்பிரமணியன் தலைமறைவாகியுள்ளார். 20க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜானிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த போலி சாமியார் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் ஐயாதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.