கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை- கணவர், மாமியார் கைது
தூத்துக்குடி கே.வி. கே.நகர் பகுதியை சேர்ந்த சேர்மதுரை என்பவரது மகள் முத்தாரம்மனுக்கும், அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கிருஷ்ணபெருமாள் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமானது முதல் முத்தாரம்மனை கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே மாமியார் மற்றும் கணவர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்தாரம்மன் புகார் அளித்து, பின்னர் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், முத்தாரம்மன் நான்கு மாதம் கர்ப்பமான நிலையில், கருவை கலைக்குமாறு மாமியார் லட்சுமி மற்றும் கணவர் கிருஷ்ணபெருமாள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த முத்தாரம்மன், தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாரம்மன் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், கணவர் கிருஷ்ண பெருமாள் மற்றும் மாமியார் லட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.