சீரியல் கில்லர் கைது.. கொல்லப்பட்டவர் யார்? அலறவிடும் விசித்திர வழக்கு.. தூக்கம் தொலைத்த போலீஸ்
சீரியல் கில்லர் கைது.. கொல்லப்பட்டவர் யார்? அலறவிடும் விசித்திர வழக்கு.. தூக்கம் தொலைத்த போலீஸ்
சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கொலை செய்தவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டவர் யார்? எனத் தெரியாமல் போலீசார் திணறி வரும் சம்பவம் குறித்து பார்க்கலாம்.. விரிவாக..
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் இருந்து பாளையங்கோட்டை செல்லும் சாலையில், மேல பாண்டியாபுரம் ரயில்வே கேட் அருகே...
கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி, 11 வெட்டுக் காயங்களுடன் அழுகிய நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக, மணியாச்சி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தான், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி பாறைக்குட்டம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட வீரமணி என்பவர், தலையில் வெட்டுக் காயம் பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த போது, ஜூன் 12ஆம் தேதி, அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலத்திலும் இதே மாதிரியான தாக்குதல் நடந்திருப்பது, போலீசாருக்கு பொறி தட்டி இருக்கிறது.
இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், பாறைக்குட்டம் பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரை பிடித்து விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.
ஆம்... கடந்த ஜூன் மாதம் பைக்கில் சென்ற கேசவன் மீது, அடையாளம் தெரியாத ஒருவர், தனக்கு லிஃப்ட் தராத ஆத்திரத்தில் கல்லை வீசி இருக்கிறார்.
இதனால், கோபமடைந்த கேசவன், நேராக வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து, அந்த நபரை 11 முறை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இது போலவே, கடந்த ஆகஸ்ட் மாதம் மனநலம் பாதிக்கப்பட்ட வீரமணி என்பவரை, கேசவன் அரிவாளால் வெட்டி இருக்கிறார்.
மேலும், கிராமத்தில் ஒரு சைக்கோவைப் போலவே கேசவன் சுற்றித் திரிவார் என அப்பகுதியினர் கூறி இருக்கின்றனர்.
என்னதான் கொலையாளியான கேசவனை பிடித்து இருந்தாலும், அவரால் ஆறு மாதங்களுக்கு முன் கொல்லப்பட்டவர் யார்? என்ற விவரம் தெரியாததால், மணியாச்சி போலீசார் திணறி வருகின்றனர்.