`கல்யாண ராணி' போய் இப்போது `காதல் ராணி' - ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்.. பகீர் கிளப்பிய நர்ஸ்
திருவள்ளூவர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தேவி. செவிலியர் படிப்பை முடித்த தேவி நோயாளிகளின் வீட்டில் தங்கி மருத்துவம் பார்த்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் உறவினரான சாய்ராம் என்ற இளைஞரைத் தேவி காதலித்து வந்து இருக்கிறார். ஆனால் தேவி சாய்ராமிற்குச் சித்தி முறை என்பதால் இவர்களது காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டிலிருந்து தேவி மாயமானதாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் இருவரும் வழக்கறிஞருடன் காவல் நிலையத்திற்கு வந்தனர். தேவியிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது விஜய் என்ற இளைஞர் தன்னை தேவி காதலித்து ஏமாற்றியதாகக் கூறி காவல் நிலையத்திற்கு வந்து இருக்கிறார். மேலும் தன்னிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாகக் கூறி இருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது 12க்கும் மேற்பட்டோரிடம் இது போன்று மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஜோடிகள் இருவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி இருவரையும் அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.