ரூ.300க்காக...ஊரெல்லாம் குப்பையைவாரி... கடையில் கொட்டிய அதிர்ச்சி - நகராட்சி அதிகாரிகள் செய்த கொடுமை

x

வழக்கமாகச் சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளைத் தூய்மை பணியாளர்கள் அகற்றும் காட்சிகள் என்பது வழக்கமான ஒன்று.. ஆனால் கடந்த மூன்று நாட்களாக நடந்த சம்பவங்களை பார்த்த பொது மக்களுக்கு அது வழக்கமானது அல்ல என்பது புரிந்தது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நர்பத் என்பவர் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். கடந்த இருபது வருடமாக கடை நடத்தி வரும் நர்பதுக்கு ஆறு மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆறு மாதங்களுக்கு மேலாக மூடிய கடையை உடல் நலம் தேறிய பிறகு தீபாவளிக்கு முன்பாக விழாக்கால விற்பனை மூலம் லாபம் பார்க்கலாம் என எண்ணிய நர்பத் கடையைத் திறந்து இருக்கிறார்.

அப்போது அவரது கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் வைத்து இருந்ததால் 300 ரூபாய் அபராதமாக விதித்து இருக்கின்றனர் திருத்தணி நகராட்சி அதிகாரிகள்.

இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கான ஆண்டு லைசென்ஸ்க்கான பணமான ரூ.300ஐ நர்பத் கட்டவில்லை என கூறப்படுகிறது. நர்பத் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் விரைவில் கட்டி விடுவதாக அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார்.

ஆனால் தொடர்ந்து பணத்தை கட்டாமல் இழுத்தடித்து வந்ததால் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் சேகரித்த குப்பைகளை நர்பத் கடை முன்பு கொட்டி சென்றதால் நர்பத் அதிர்ச்சியடைந்தார்.

இதனால் பதறிய நர்பத் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணத்தை கட்டிவிடுவதாக

கூறியதைத் தொடர்ந்து மீண்டும் அவரது கடைக்கு வந்த தூய்மை பணியாளர்கள் போட்டுச் சென்ற குப்பைகளை நகராட்சி வாகனத்தில் அள்ளி சென்றனர்.

வரியைக் கட்ட வில்லை என்பதற்காக வியாபாரியின் கடை முன் நகராட்சி அதிகாரிகள் குப்பையைக் கொட்டி சென்ற சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நடந்த சம்பவம் திருத்தணி நகராட்சி துறையிலிருந்து எந்த பதிலும் அளிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்