ஆடு, மாடு கட்டும் இடமாக மாறிய தாஜ்மகால் - பின்னணியில் இவ்ளோ ரகசியமா?
தமிழ் உதவிப்பேராசிரியர் பிரபு, சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், முத்தமிழ் வேந்தன், சந்திரசேகரன், மகேந்திரன் ஆகியோர் திம்மாம்பேட்டையில் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் ஒரு வார காலமாகத் தொடர் கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்போது மண்ணாற்றின் கரையோரம் ‘சமாதித்தோப்பு’ என்ற இடத்தில் சிதிலமடைந்த நிலையில் இரண்டடுக்கு மாளிகை போன்ற அமைப்பு கொண்ட பழமையான கட்டட அமைப்பினைக் கண்டறிந்தனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட போது, அது ஜமீன் தாரர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டடம் என்றும், இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு ஜமீன்தாரர் தனது காதலியின் நினைவாகக் கட்டிய கல்லறை எனவும் கூறப்படுகிறது. சுண்ணாம்பு, கடுக்காய், பதநீர், நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக்கரு கொண்ட கலவையினால் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அக்கல்லறையை மட்டும் இடித்துச் சமப்படுத்தியுள்ளனர். வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் இப்பகுதியானது.
‘கங்குந்தி ஜமீன்’ எல்லைக்கு உட்பட்டதாகும். ஜமீன் ஆட்சியில் கடைசியாக இப்பகுதியினை ஆட்சி செய்தவர் ‘வேங்கடபதி நாயணகாரு’ என்ற ஜமீன்தார். இவர் 1915ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் உள்ளன. திம்மாம்பேட்டையில் காணப்படும் கல்லறை மாளிகையின் வரலாறு ‘வேங்கடபதி நாயணகாரு’ என்ற ஜமீன்தாரின் ஆட்சிக்காலத்தோடு ஒத்துப்போகிறது. பெரும்பாலும் தமிழர் நிரம்பிய பகுதியான கங்குந்தி இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ளது. அமைதியான ஆற்றங்கறையில் அழிவின் விளிம்பில் காதலைப் பறைசாற்றியபடி வரலாற்றின் மிச்சமாய் இந்த காதல் சின்னம் நிற்கிறது. தற்போது ஒரு அடுக்கு மட்டுமே அங்கு காணப்படுகின்றது. தனியாருக்குச் சொந்தமான அவ்விடத்தில் ஆடுமாடுகளை கட்டி வைப்பதற்கு இக்கல்லறையினைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.