சஸ்பெண்ட் செய்த திருமாவுக்கு ஆதவ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலை தான், மன்னர் பரம்பரைக்கான மனநிலை என்று, வி.சி.கவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அம்பேத்கரை பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் மன்னராட்சி என அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆதவ் அர்ஜுனா வி.சி.கவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிகாரத்தை அடைவோம், என்று தலைவர் திருமாவளவன் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற,
உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார்.
எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன் என்றும்,
கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன் என்றும் கூறியுள்ளார்.
நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும்,
அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன் என்றும் ஆதவ் அர்ஜுனா,
தெரிவித்துள்ளார்.
தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ,
அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலை தான், மன்னர் பரம்பரைக்கான மனநிலை என்று கூறியுள்ள ஆதவ் அர்ஜுனா,
அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று கூறியுள்ள அவர்,
தலித், பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை இப்போதும் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்தியல் வழியாக தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாக பயணிக்கிறேன் என்றும்,
கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் வீழ்த்துவேன் என்றும்,
‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்,என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம் என்வும், ஆயிரம் கைகள் மறைத்தாலும்…
ஆதவ(ன்) மறைவதில்லை! என்றும், அந்த அறிக்கையில், ஆதவ் அர்ஜுனா,தெரிவித்துள்ளார்.