வெற்றி வேல்...வீர வேல்.. அரோகரா முழக்கத்தில் எண்ட்ரி கொடுத்து சூரனை வதம் செய்தார் ஜெயந்திநாதர்
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரத்தைத்தொடர்ந்து இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.கந்தசஷ்டி திருவிழா கடந்த 2 ஆம் தேதி தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை காண திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். கோயிலின் அருகே கூடிய கூட்டங்கள் கடலா... கடல் அலையா என கேட்கும் அளவிற்கு கோயில் பக்தர்கள் அலையில் மிதந்தது. அன்னையிடம் இருந்து பெற்ற சக்தி வேலுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சூரனை வதம் செய்வதற்காக போர்க்கோலத்தில் புறப்பட்ட ஜெயந்திநாதர், கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது வெற்றி வேல்... வீர வேல் என்ற பக்தர்கள் முழக்கம் விண்ணதிரச் செய்தது. பக்தர்களின் அரோகரா முழக்கத்திற்கு மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. பல உருவங்களில் உருமாறி வந்த சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்தார். ஆணவத்தால் அடிபணிய மறுத்த சூரனை ஆட்கொண்ட முருகப்பெருமான், அவனை மயிலாகவும், சேவற்கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.