அரிவாளுடன் சுற்றிய மர்ம நபர்கள் - தைரியமாக கேட்ட நிருபருக்கு தலையில் வெட்டு.. தேனியில் அதிர்ச்சி
தேனி அருகே கிராமத்தில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்களை அழைத்து விசாரித்த நிருபரை வெட்டிய மூன்று பேர், கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, நாளிதழ் ஒன்றில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். ஜி.உசிலம்பட்டியில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அவரும் அவரது மனைவியும் கோவில் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் அரிவாளுடன் 3 பேர் சந்தேகப்படும் படி சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை அழைத்து பால்பாண்டி விசாரித்துள்ளார். அப்போது 3 பேரும், பால்பாண்டியை ஆபாசமாக பேசி அரிவாளால் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். பலத்த காயம் அடைந்த பால்பாண்டி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரைத்தொடர்ந்து, தாக்க்குதலில் ஈடுபட்ட போடியை சேர்ந்த கணேசன் மற்றும் சின்னசாமி, ஜி உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி கண்ணன் ஆகிய பேரை போலீசார் கைது செய்தனர்.