"இப்படி ஒரு வியாதியா?" திருட திருட ஏறும் போதை... போலீசையே நம்ப வைத்த ஆக்டிங்! திகில் கிளப்பிய கொள்ளை
சென்னை முடிச்சூரை சேர்ந்தவர், பெரோஸ் கான். திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வரும் இவர், போதைக்கு அடிமையானதன் விளைவாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். எப்போதும் போதையிலேயே இருக்க விரும்பிய இவர், பீரில் வலி நிவாரண மாத்திரைகளை கலந்து குடிக்கும் பழக்கத்தை உடையவர். அதே போதையில் சென்று கொள்ளையடிப்பதும், அந்த பணத்தை வைத்து மறுநாள் போதைக்கான செலவை செய்வதும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்...
இந்நிலையில், கொளத்தூரில் உள்ள மெழுகு சிலை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்த இவர், 9 லேப்டாப்புகள், 4 செல்போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தார்.
இது குறித்து தனியார் நிறுவனத்தின் உரிமையாளர், சிசிடிவி ஆதாரங்களுடன் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த சிசிடிவி காட்சிகளில் பெரோஷ் கான் முழுபோதையில் கொள்ளையடித்தது, ஒரு சைக்கிளை திருடிவிட்டு நடக்க முடியாமல் நடந்து சென்றது ஆகியவை பதிவாகியிருந்தது.
திருடிவிட்டு செல்லும் போது, எதிரே வந்த ரோந்து காவலர்களையும் கேஷுவலாக கடந்து சென்றார்.
போலீஸை பார்த்ததும் பக்காவாக நடித்த பெரோஷ் கான், சிறிது நேரத்தில் போதை காரணமாக நடுரோட்டில் தடுமாறி விழுந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் சைக்கிளை உருட்டி செல்ல திணறிய பெரோஷ் கான், சைக்கிளை சாலையிலேயே போட்டு விட்டு சென்றுள்ளார்.
பெரோஷ் கான் மீது ஏற்கனவே இருசக்கர வாகன திருட்டுகள் நிலுவையில் இருந்ததால், பெரோஷ்கானை உடனடியாக கொளத்தூர் போலீசார் அடையாளம் கண்டனர். பின்னர், பெரோஷ் கானை கைது செய்து விசாரித்ததில், திருடிய 9 லேப்டாப்களில் மூன்றை பாதி விலைக்கு விற்றதும், அந்த பணம் முழுவதையும் போதையில் திளைப்பதற்கே செலவளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, லேப்டாப்களை விற்பதற்கு உதவிய அவரது கூட்டாளி நிஜாமுதீனும் கைது செய்யப்பட்டார்.