தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த குரங்கு குட்டி வழக்கு... புதிய Update
2023 டிசம்பரில், காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர்,கால்நடை மருத்துவர் வல்லயப்பனிடம் ஒப்படைத்தார். 10 மாதங்கள் அவர் குரங்குகுட்டிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், வனத்துறையினர் கடந்த மாதம் குரங்குக் குட்டியை வாங்கிச் சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்த்தனர். இந்த நிலையில், குரங்கு குட்டி, கடந்த 20ம் தேதி மரணமடைந்தது. இதையடுத்து வல்லையப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குரங்கு குட்டி மரணம் தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது. நவம்பர் 14ம் தேதி ஆரோக்கியமாக இருந்ததாக கூறப்பட்ட குரங்கு குட்டி எப்படி இறந்தது என மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. எந்த தொற்றும் பாதிக்காத வகையில் 10 மாதங்கள் மனுதாரர் சிகிச்சை அளித்த நிலையில், வண்டலூர் பூங்காவில் சேர்க்கப்பட்ட 27 நாட்களில் அது இறந்திருக்கிறது எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை, நவம்பர் 28ம் தேதி தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.