#JUSTIN || `சென்னை to டெல்லி விமான பயணம்' - வானில் காத்திருந்த எமன் - 172 பயணிகள் உயிரை காத்த பைலட்

x

சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு விமானி நடவடிக்கையால் உயிர் தப்பிய பயணிகள்


சென்னை மீனம்பாக்கம் உள்னாட்டு விமான நிகையத்தில் இருந்து டெல்லிக்கு 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்லும் போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி அவசரமாக விமானத்தை இயக்காமல் நிறுத்தினார். இது பற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதை அடுத்து வழியில் நிறுத்தப்பட்ட விமானம் மீண்டும் நடைமேடைக்கு இழுவை வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. உடனே விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக முயற்சி செய்தும் விமானத்தை சரிபார்க்க முடியவில்லை. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து பயணிகள் 164 பேரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு உணவு போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விமானம் பழுதுபார்க்கப்பட்டு இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய, 164 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இதற்கிடையே விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, உடனடியாக எடுத்த நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்தில் இருந்து தப்பித்து, விமானத்திலிருந்து 164 பயணிகள் உட்பட 172 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்