ஐஏஎஸ் அதிகாரி பெயரில் மோசடி? சைபர் கிரைம் போலீசாருக்கே அதிர்ச்சி
சைபர் கிரைம் மோசடி கும்பல், ஒவ்வொரு நாளும் புதுவிதமான வடிவத்தில் வந்து பொதுமக்களிடம் பணம் பறித்து வரும் நிலையில் ஐஏஎஸ் அதிகாரி பெயரிலேயே மோசடி செய்ய முயன்றுள்ளது. தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளரான ராதாகிருஷ்ணனில் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி facebook கணக்கை போலியாக உருவாக்கிய அந்த கும்பல், CRPF-க்கு பணம் அளிக்குமாறு அவரது நண்பர்களுக்கே குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது. அதில், QR கோடு புகைப்படத்தையும் அனுப்பி ஜிபே-வில் பணம் செலுத்துமாறு தெரிவித்ததை பார்த்த ராதாகிருஷ்ணன், அந்த கும்பலுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மேலும், தனது பெயரில் ஒரே ஒரு சமூக வலைதள கணக்கு மட்டும் இருப்பதாகவும், இதுபோன்று போலி சமூக வலைதள கணக்குகளுக்கு நட்பாகும்படி அணுகினால் தவிர்த்து விடும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையிலும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி பெயரிலேயே மோசடி செய்ய முயன்ற சம்பவம், தமிழக காவல் துறைக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.