பள்ளி சீருடையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த மாணவர்கள்... மாவட்ட ஆட்சியர் சொன்னது இதுதான்..!
திருப்பத்தூர் மாவட்டம், கிரிசமுத்திரம் தென்னந்தோப்பு வட்டம் பகுதியில் வசிக்கும் ஆதி திராவிட பிரிவினர், கோயில் வழியாக இருக்கும் பொது வழியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதால், கடந்த ஒரு வார காலமாக அந்த பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் இன்று பள்ளி சீருடையுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரிடம் இன்று மாலைக்குள் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து தகவல் அளிக்க உத்தரவிட்டார். பள்ளி சீருடையில் மனு கொடுக்க வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இங்கே ஏன் அழைத்து வந்தீர்கள் என்றும், நீங்கள் சொன்னால் நான் நடவடிக்கை எடுக்க மாட்டேனா என்று கடிந்து கொண்டார். மாணவ மாணவிகளை முதலில் பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கூறினார். இது குறித்து விசாரணை மேற்கொள்ள, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும், பள்ளியின் தலைமை ஆசிரியரையும் வரச் சொல்லி உத்தரவிட்டார்.