யூடியூபர் டிடிஎஃப் வாசனின் வளர்ப்பு பிராணி அரியவகை பால் பைத்தான்
போக்குவரத்து விதிகளை மீறி பைக்கில் சாகசம் செய்தல் உள்ளிட்ட காரணங்களால், டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பல்வேறு வழக்குகளையும் டிடிஎஃப் வாசன் சந்தித்து வரும் நிலையில், கையில் மல்லிகைப் பூவைப் போல அரியவகை மலைப்பாம்பை சுற்றிக் கொண்டு இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ தான், புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வளர்ப்பு பிராணி வாங்கப் போவதாக கூறி, வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசன், கையில் மலைப்பாம்பு ஒன்றை சுற்றி வைத்துக் கொண்டு வெளியிட்ட வீடியோ தான், இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மலைப்பாம்பை வளர்ப்பு பிராணியாக வளர்க்கப் போவதாக டிடிஎஃப் வாசன் கூறி இருந்த நிலையில், அவர் கையில் வைத்திருந்தது, அரியவகை மலைப்பாம்பு என தெரியவந்துள்ளது. பால் பைத்தான் எனப்படும் இந்த மலைப்பாம்பை முறையான ஆவணங்கள் மூலம் தான், வாசன் வாங்கினாரா? என்ற சந்தேகத்தை வனத்துறையினருக்கு ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, இது போன்ற உயிரினங்கள் திருவொற்றியூர் பகுதியில் உள்ள கடைகளில் கிடைப்பதாக வீடியோவில் கூறவே, இதுவே இப்போது சம்பந்தப்பட்ட கடையும் வசமாக சிக்கியிருக்கிறது.
இந்த நிலையில் டிடிஎஃப் வாசனது சட்ட ஆலோசகர் தரப்பில், தான் வைத்திருக்கும் மலைப்பாம்பு தொடர்பாக உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் அவர் வீடியோ மூலம் கூறியுள்ளார்.
அதன்படி, இது குறித்து முதற்கட்டமாக வாசனிடம் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டபோது, அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சென்ற நிலையில், டிடிஎஃப் வாசன் சென்னையிலேயே இல்லாதது தெரியவந்துள்ளது.
மேலும், மேட்டுப்பாளையத்தில் உள்ள டிடிஎஃப் வாசன் இல்லத்தில் வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாசன் வைத்திருப்பதாக கூறும் ஆவணங்களை தற்போது வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். உண்மையில் இந்த பால் பைத்தான் எனப்படும் அரியவகை மலைப்பாம்பு முறையாக வாங்கப்பட்டதா?
அல்லது சட்ட விரோதமாக கொண்டு வந்த பிறகு, டிடிஎஃப் வாசனால் வாங்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருவேளை, சட்டவிரோதமாக அரியவகை மலைப்பாம்பை வாங்கி இருந்தால், டிடிஎஃப் வாசனிடமிருந்து மலைப்பாம்பு முதலில் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.