ஆண்டின் இறுதியில் 6 பேர் உயிர் குடித்த மருத்துவமனை
அரசியல் களத்தில் முதல் முறையாக போட்டியிட்டு மண்டி தொகுதியின் எம்.பி.யாக தேர்வான கங்கனா ரணாவத்திற்கு விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவரால் விழுந்த அந்த ஒரு அறை பலருக்கும் ஷாக் தான். காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், எம்.பி.யான மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு நிச்சயம் வருத்தத்தை தான் தந்திருக்கும்...
தரையிறங்க முடியாமல் தவிப்பு.. திகிலில் 141 பயணிகள்..
திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு சென்ற விமானம் திடீரென வானத்தில் வட்டமடித்துக் கொண்டே இருக்க பயணிக்கு பை பை சொல்ல வந்த உறவினர்கள் பதறித்துடித்தனர்... உள்ளே இருந்த 141 பயணிகளும் சார்ஜாவை நெருங்கிவிட்டோம் என நினைத்துக் கொண்டிருக்க ஏறிய திருச்சி விமானத்திலேயே இறக்கிவிடப்பட்டனர். அப்போது தான் பெல்லி லேண்டிங் முறையில் பாதுகாப்பாக அவர்கள் உயிர் தப்பியது தெரியவர, தொழில்நுட்ப கோளாறு தான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம் என தெரியவந்தது.
ஹேமா கமிட்டியால் கலங்கிய மலையாள சினிமா
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரின் பெயரும் பாரபட்சமின்றி வெளிச்சத்திற்கு வந்தது ஹேமா கமிட்டி அறிக்கையால்... நடிகைகளுக்கு இத்தனை துயரங்கள் நடக்கிறதா? என சினிமா உலகின் மற்றொரு பக்கத்தையும் உலகத்திற்கு காட்டியது இந்த அறிக்கை தான்...
ரசிகர்களுக்கு ஷாக் தந்த விவாகரத்து அறிவிப்புகள்...
இணையை பிரிகிறேன்.. என இந்த ஆண்டு வெளிவந்த அறிக்கைகள் தான் ஏராளம். ஏ.ஆர்.ரகுமான், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ், சீனு ராமசாமி என அடுத்தடுத்து திரை பிரபலங்கள் பலரும் பிரிவை அறிவித்து ஷாக் தந்தனர்...
ஆந்திராவையும், அரசியலையும் அதிர வைத்த லட்டு...
திருப்பதியின் தெய்வீகம் எனப்படும் லட்டில் மாட்டின் மாமிசக்கொழுப்பு என கிளம்பிய பூதம், பவன் கல்யாணின் பச்சை பட்டினி விரதம் வரை நீண்டது.. லட்டு பிரச்சினை நெய்யில் நீண்டு, கடைசியில் அரசியல் பிரச்சினையாக வந்து நின்றது. இந்த ஆண்டில் ஆந்திராவையும், அரசியலையும் அதகளப்படுத்தியது லட்டு தான்..
முடங்கியது மைக்ரோசாப்ட் சர்வர்..
மைக்ரோசாப்ட் சர்வர், செயலிகள், சேவைகள் உலகம் முழுவதும் ஜூலை 18ம் தேதி திடீரென முடங்கிப்போனது. இதனால் ஐடி நிறுவனங்கள், விமான சேவைகள், போக்குவரத்து, வணிகம் என அனைத்துத் துறைகளும் ஸ்தம்பித்துப் போயின... ஒரே நாளில் உலகமே ஏதோ பின்னோக்கி சென்றது போல மாற துடித்துப் போனார்கள் இணையவாசிகள் பலரும்...
திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி
அமைதியாக இருக்கும் தெய்வானையா இப்படி செய்தாள்? என பக்தர்கள் கலங்க திருச்செந்தூரே சோக மயமானது. உடன் இருந்து பழகிய பாகன், அவரின் உறவினர் என 2 பேரின் உயிர் பறிபோக தெய்வானை காரணமாக இனி இப்படி எல்லாம் செய்ய மாட்டேன் என சில நாட்களுக்கு பிறகு காதை பிடித்துக் கொண்டு தெய்வானை கேட்ட மன்னிப்பு அதன் குணத்தை புரியவைத்தது...
திருவண்ணாமலை நிலச்சரிவு
ஜோதியின் வடிவாக காட்சி தரும் அண்ணாமலையாரின் அருள் தரும் மலை 7 பேரின் உயிரை குடித்தது வரலாற்றின் பிழை... ஒரு மழை எத்தனை பெரிய சீற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாகி போனது இந்த சம்பவம்... பாறைகள் உருண்டு விழுந்து சரிந்த காட்சிகளும், 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட காட்சிகளும் நம் கண்ணை விட்டு மறைய நாட்கள் பல ஆகலாம்..
ஆண்டின் இறுதியில் 6 பேர் உயிர் குடித்த மருத்துவமனை
எப்படியும் குணமாகி விடுவோம் என நினைத்து மருத்துவமனையில் இருந்தவர்கள் மரித்துப்போவதெல்லாம் எத்தனை பெரிய துயரம்.. அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் அரங்கேறியது. திடீரென ஏற்பட்ட தீ விபத்து குழந்தை உட்பட 6 பேரின் உயிரை காவு வாங்க இரவு நேரத்தில் கேட்ட மரண ஓல சத்தம் அப்பகுதி மக்களை இன்னும் அச்சத்திலேயே வைத்திருக்கும்...
அதிர்ச்சி தந்த அண்ணா பல்கலைக்கழக சம்பவம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து காதலர்களாக உள்ள மாணவ, மாணவிகளை குறி வைத்து, அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்த நிலையில், அவரது பின்னணியும் தமிழகத்தை திடுக்கிடச் செய்தது..
பாமக பொதுக்குழு - ராமதாஸ் Vs அன்புமணி மோதல்
பாமக இளைஞரணி தலைவர் பதவியை தன் மகள் வழி பேரனுக்கு தருவதாக பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவிக்க மேடையிலேயே கொந்தளித்தார் அன்புமணி... அதே மேடையில் தான் ஆரம்பித்த கட்சி அலுவலகத்தின் நம்பரை அன்புமணி அறிவிக்க, நான் சொல்வதை கேட்பவர்கள் இங்கே இருக்கலாம், இல்லாவிட்டால் கிளம்பலாம் என ராமதாஸ் பதில் சொல்லs பரபரத்து போனது பாமக வட்டாரம்...