விசாரணைக்கு அழைத்ததால் மன உளைச்சலில் முதியவர் தற்கொலை
மண்டபம் முனைக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி பேச்சியம்மாள் என்கிற சின்னப்பொண்ணு, அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி இரவு வியாபாரம் முடிந்து வீடு திரும்பியபோது நோட்டமிட்ட மர்மநபர்கள், சின்னபொண்ணுவை கொலை செய்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் கவரிங் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக மண்டபம் முனைக்காடு பகுதியை சேர்ந்த முதியவர் சின்னக்காஞ்சி மற்றும் அவரது உறவினர்களை மண்டபம் போலீசார் கடந்த இரண்டு நாட்களாக காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் சின்னக்காஞ்சி, இரவில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.