XRay எடுக்க சென்றவருக்கு நேர்ந்த... `வலியை விட கொடுமை'யான சம்பவம் - அரங்கேறிய அவலம்... அதிர வைக்கும் பின்னணி

x

கையில் எலும்பு முறிவு என வந்தவருக்கு X-ray-விற்கு பதிலாக, ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு கையில் எலும்பு முறிவுடன் சென்றவருக்குத் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது...

கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த காளி பாண்டி என்பவர் ஹோட்டல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் பைக்கில் சென்றபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டார். இதனால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட வேதனையுடன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சுமார் 10 மணிக்கு வந்திருக்கிறார்.

அங்கு காளி பாண்டியை சோதனை செய்த மருத்துவர், உடனடியாக X-ray எடுத்துவிட்டு வருமாறு கூறியிருக்கிறார்.. தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ஸ்ரே எடுக்கும் மையத்தில் காளி பாண்டி, எக்ஸ்ரே எடுத்துள்ளார்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு, எக்ஸ்ரே ரிப்போர்ட் ஃபிலிம்மை வழங்காமல், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் ரிப்போர்ட்டை ஒரு பேப்பரில் ஜெராக்ஸாக பிரிண்ட் அவுட் போட்டு காளி பாண்டியின் கையில் கொடுத்திருக்கிறார்கள்.. இதைக் கண்ட காளி பாண்டி, அதிர்ச்சி அடைந்திருக்கிறார்..

இது குறித்து காளி பாண்டி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, ஃபிலிம் தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர்..

தொடர்ந்து மருத்துவரைக் காண்பதற்கு வேகமாக சென்ற காளி பாண்டி மருத்துவர்கள் அங்கு இல்லாதது கண்டு ஏமாற்றத்துடன், கையில் வலியுடன் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார்.

அங்கு, அரசு மருத்துவமனை ஊழியர்கள் வழங்கிய ஜெராக்ஸ் பேப்பரை, மருத்துவரிடம் காண்பித்தபோது, எக்ஸ்ரேவை, ஃபிலிமில் தான் எடுத்துக் கொண்டுவர வேண்டும்.. பேப்பரில் ஜெராக்ஸ் போட்டு கொண்டு வந்தால், சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறி, திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இதனால், மனமுடைந்த காளி பாண்டி, ஒருவரிடம் 500 ரூபாய் கடன் வாங்கி, தனியார் எக்ஸ்ரே மையத்தில் எக்ஸ்ரே எடுத்து வந்து தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது..

மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையில், எக்ஸ்ரே மையத்தில் ஃபிலிம் தீர்ந்துவிட்டதாக கூறப்படுவது மட்டுமில்லாமல், மருத்துவர்கள் சரிவர சிகிச்சை அளிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் எக்ஸ்ரே குறித்த விபரங்கள் நேரடியாக மருத்துவருக்கே செல்லும் வசதி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்