அறநிலைய துறை டெம்ப்ரரி ஊழியர்கள் செய்த அதிர்ச்சி செயல்
உளுந்தூர்பேட்டை அருகே கோயிலில், இரும்புப் பொருட்களை திருடி விற்க முயன்ற அறநிலையத்துறை தற்காலிக ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான பக்த ஜனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், சீரமைப்பு பணிகளின் போது சேகரிக்கப்பட்ட இரும்பு மற்றும் பிற கட்டுமான பொருட்கள் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை, கோயில் செயல் அலுவலர் உறுதுணையோடு சிலர் திருடிச் சென்று இரும்பு கடையில் விற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, டிராக்டரில் இரும்புப் பொருட்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோயில் செயல் அலுவலர் மதனா அளித்த புகார் அடிப்படையில், அறநிலையத்துறை தற்காலிக பணியாளர்கள் பாண்டியன், ஜெயபால், லோகேஸ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து டிராக்டர் மற்றும் இரும்புப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.