"மாதம் ரூ.12,500 எங்களுக்கு போதாது" - போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்... சென்னையில் பரபரப்பு
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை, கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக அரசு நேர்முகத் தேர்வு மூலம் பணியில் அமர்த்தியது. கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு 5000 ரூபாயில் தொடங்கி தற்போது 12 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக பொருளாதார பாதிப்பினாலும், உறுதியில்லா வாழ்வாதாரத்தினாலும் 4 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற்று விட்டனர். பலர் வறுமையால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் கோரி, கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் அறிவித்திருந்த நிலையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் வெளியே பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தங்களை அரசு அழைத்து பேச்ச்சுவார்த்தை நடத்தவில்லை எனில், தங்கள் போராட்டம் தீவிரமடையும் என்றும் பகுதி நேர ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.