சாதா காய்ச்சல்.. போக கூடாத இடத்துக்கு போன தாம்பரம் மாணவன் -உடல் முழுக்க ரத்தக்கட்டு வந்து அகால மரணம்

x

முதலாம் ஆண்டு கல்லூரியில் படித்த மாணவனுக்கு நடந்து துயரமான சம்பவம் ஒட்டு மொத்த குடும்பத்தையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு..

அந்த கடையின் கண்ணாடிகள் துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்தன.. மற்றொரு புறம் ஆவேசமாக இருந்த மக்களை போலீசார் சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரை சேர்ந்தவர் ஏழுமலை.. மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். மீன் வியாபாரம் செய்து வரும் ஏழுமலையின் இளையமகன் சந்தோஷ் கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சந்தோஷுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சந்தோஷை அழைத்துச் சென்று இருக்கிறார் அவரது தாயார்.

அந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் வீடு திரும்பி இருக்கிறார். அப்போது அருகிலிருந்த ராகவேந்திரா என்னும் மருந்தகம் சென்று காய்ச்சலுக்கு மருந்து தருமாறு கேட்டு இருக்கிறார்.

அப்போது மருந்தகத்திலிருந்த பெண் ஊழியர் ஜெயந்தி என்பவர் சந்தோஷை சோதனை செய்து விட்டு அவருக்கு ஊசி போட்டு இருக்கிறார். இதனிடையே வீட்டிற்குச் சென்ற சந்தோஷ் வலியால் துடித்து இருக்கிறார்.

இதனால் மீண்டும் அதே மருந்தகத்திற்குச் சென்ற சந்தோஷின் தாய், தன்னுடைய மகன் வலியால் கடுமையாக அவதிப்படுவதாகக் கூறியதால் மருந்தகத்திலிருந்த ஊழியர்கள் சில தைலங்களைக் கொடுத்து மகனுக்குத் தேய்த்து விடுமாறு கூறி இருக்கின்றனர்.

இந்த நிலையில் சந்தோஷின் உடல் மிக மோசமடைந்ததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சந்தோஷை கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குத் தவறான முறையில் செலுத்தப்பட்ட ஊசியினால் தான் சந்தோஷ் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தொடர்ந்து ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சந்தோஷை அவர்களது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து அவரது உடலை வீட்டிற்குக் கொண்டு வந்த உறவினர்கள் தவறான ஊசியைச் செலுத்தியதால் தான் சந்தோஷ் உயிரிழந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனிடையே ஆத்திரமடைந்த உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருந்தகத்தை அடித்து நொறுக்கி கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.தொடர்ந்து சந்தோஷின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

உடல் நிலை சரியில்லை என்றால் முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுகுங்கள் என்று அரசு பலமுறை வலியுறுத்தியுள்ள நிலையில் கல்லூரி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்