தற்கொலைக்கு முயன்றதோடு 5 பேரைக் கொல்ல முயன்ற சாமியார்-திடுக்கிடும் தகவல்
அம்மகளத்தூர் கிராமத்தில் கோவில் சாமியாராக இருந்த முரளி கணேசன் என்பவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் வீட்டின் அருகிலேயே சிறியதாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஒன்றையும் நிறுவியுள்ளார். கணேசனின் தம்பி மகன் ராமமூர்த்தி முரளிக்கு உதவியாளராக இருந்த நிலையில் 15 வருடங்களுக்கும் மேலாக முரளி குறி சொல்லி வந்துள்ளார்... இதனிடையே கோவில் திருவிழா நடத்துவதற்காக பல்வேறு கிராமங்களில் கடன் பெற்ற முரளி அதனை திரும்பி கொடுக்க முடியாமல் சிக்கலில் சிக்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் முரளியை தொந்தரவு செய்ய ஆரம்பித்ததால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த முரளி பாலிஷ் போடுவதற்கும் கோயிலை சுத்தம் செய்வதற்காகவும் வைத்திருந்த சுத்திகரிப்பான் திரவியத்தை தண்ணீரில் கலந்து தான் குடித்ததோடு கணேசன் குடும்பத்தினருக்கும் தீர்த்தம் எனக்கூறி கொடுத்துள்ளார்... ஒவ்வொருவராக மயங்கி விழ அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் முரளி ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தும் வாங்கி வந்தது தெரிய வந்தது... கணேசன் உள்ளிட்ட பலரிடம் 60 லட்சம் வரை பணமாகவும்,70 சவரன் நகையாகவும் வாங்கி வங்கியில் அடகு வைத்து திருவிழா, அன்னதானம் என செலவு செய்ததாக கூறப்படுகிறது. கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்... ஆனால் கணேசன் குடும்பத்தைக் கொல்ல முயன்றது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. கடன் கொடுத்தவர்கள் இதுவரை போலீசில் புகாரளிக்காத நிலையில் முரளிக்கு சிகிச்சை முடிந்த அடுத்த நொடியே போலீசார் அவரைக் கைது செய்யவுள்ளனர்... காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .