பரந்தூர் விமான நிலையம் அமைக்க 13 கிராம மக்கள் எதிர்ப்பு...ஏகனாபுரம் ஊராட்சி மன்ற து.தலைவர் திவ்யா கணபதி தற்கொலை

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் ஊராட்சியில் இந்த சோகம் நடந்துள்ளது.. பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து தமிழக அரசும் மத்திய அரசும் பணிகளை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20 கிராமத்தினர் போரடி வரும் சூழலில், ஏகனாபுரத்தில் போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவர் தான், திவ்யா கணபதி. இவருக்கு கணபதி என்ற கணவரும் 2 ஆண் மற்று ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திவ்யா கணபதி ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில், மத்திய மாநில அரசுகளின் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம் அறிவிப்பு கணபதி - திவ்யா தம்பதியரின் தலையில் பேரிடியாக விழுந்திருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே ஏகனாபுரம் ஊராட்சி உள்ளிட்ட 20 கிராம மக்களுடன் இணைந்து நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன..

இதனிடையே, கணபதி பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு முக்கிய நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில் தான், திவ்யா கணபதி சில மாதங்களாகவே, தன்னுடன் நெருங்கி பழகும் உறவினர் மற்றும் நண்பர்களிடம் விமான நிலைய திட்டத்திற்காக நம்முடைய கிராமத்தில் உள்ள குடியிருப்புகளும் விளைநிலங்களும் எடுக்கப்பட உள்ளது. நம் கிராமமும், சிட்டிசன் படபாணியில், அதில் வரும் அத்திப்பட்டியைப் போல வரைபடத்தில் இருந்து காணாமல் போய்விடும் என அவ்வப்போது மன வேதனையோடு பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

எழில் கொஞ்சும் கிராமத்தில் வயல், கால்நடைகள் என இயற்கையோடு இணைந்து குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தங்களது வாழ்க்கை தொலையப் போவதாக நினைத்து திவ்யா கணபதி, அன்றாடம் மனம் வாடிக்கொண்டே வந்திருக்கிறார்.

இப்படியாக, நாளுக்கு நாள் கடும் மன உளைச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த திவ்யா கணபதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

திரேசன், துணை செயலாளர், பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்புக்குழு

“இதுபோன்ற உயிரிழப்புகள் நடக்காமல் அரசு காக்கவேண்டும்“

இந்த சம்பவத்தால், ஏகனாபுரம் ஊராட்சியே பெரும் சோகத்தில் மூழ்கிப்போய் இருக்கிறது.. இது தொடர்பாக, பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழுவினர் தங்களுடைய whatsapp குழுவில் பதிவிட்டதால் சுற்றுவட்டார 13 கிராமங்களிலும் சோகம் நிலவுகிறது.

தங்களது கோரிக்கைகளை ஏற்காத அரசும், காவல்துறையும் தங்களது பகுதிக்கு எந்த விதமான நல்லதையும் செய்யப்போவதில்லை என்ற ஆதங்கத்தில் ஏகனாபுரம் ஊராட்சி மக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உயிரிழந்த திவ்யா கணபதியின் தற்கொலை குறித்து காவல்துறைக்கு தகவல் கூறாமலே அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தபோது, சுங்குவார்சத்திரம் போலீசார் திவ்யா கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்