ஆலமர விழுதில் ஒளிந்திருந்த `லட்சம்’ - போலீசை அதிர வைத்த 2 பேர்..
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வங்கி வாசலில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் திருடிய 2 பேரை 4 மாதங்களுக்கு பிறகு கைது செய்த போலீசார், மரத்தில் கட்டி வைத்திருந்த பணத்தை மீட்டனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள தனியார் வங்கியில் பணம் செலுத்த சரவணன் என்பவர் வந்தபோது, இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது. இதுகுறித்து அவர் கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், மல்லி காவல் நிலையத்தில் திருட்டு சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவர்களுக்கு சிங்கம்புணரி திருட்டுச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை சிங்கம்புணரி போலீசார்
அழைத்து வந்து விசாரித்தபோது, அவர்கள் ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த நாகராசு, வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை திருடி, ஒரு ஆலமரத்தில் பசு மாட்டின் இளங்கொடியை கட்டுவதுபோல் கட்டி தொங்க விட்டுள்ளனர்.
இதையடுத்து, அவர்களை அங்கு அழைத்துச் சென்று, ஆலமரத்தில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டனர்.