கடலுக்குள் சுழலின் ஆக்ரோஷம்...உள்ளே சென்று சிக்கிய 6 பேர் மரண பயத்தை காட்டிய திக்திக் நொடி
கடல் சீற்றத்தால் நடுக்கடலில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய ஆறு மீனவர்களும் கடலூரில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டிருக்கின்றனர். நடுக்கடலில் தங்களுக்கு நேர்ந்தது குறித்து மீனவர்கள் தெரிவித்திருப்பது பதற வைத்திருக்கும் நிலையில், விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
வடகிழக்கு பருவமழையால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பதற்றத்தில் இருந்த கடலூரில்தான் இந்த சம்பவம்...
புயல் எச்சரிக்கையால் கடல் சீற்றத்துடன் இருக்கும் என அலர்ட் விடுத்திருந்த வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது..
இந்நிலையில், கடலூர் மாவட்டம் தையல் தோணித்துறை என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர்.. இரண்டு பைபர் படகில் கடந்த 27 ஆம் தேதி கடலுக்கு சென்றதில் அவர்களுக்கு நேர்ந்தது மனதை பதற வைத்திருக்கிறது..
ஒரு பக்கம் கடல் சீற்றத்தால் கடலில் மேலும் பயணிக்க முடியாத நிலை..
அப்போது, நடுக்கடலில் இருந்ததால் மீனவர்கள் செய்வதறியாத தத்தளித்த சூழலில் , ஒரு படகில் இன்ஜின் கோளாறு...
இந்நிலையில், அனைவரும் ஒன்றாக ஒரே படகில் ஏறி பயணம் செய்ய முயன்றபோது, கடல் சீற்றத்தை எதிர்த்து அதிக உந்துதலுடன் பயணிக்க முற்பட்டதால் அந்த படகிலும் டீசல் காலியாகி பெரும் அபாயத்தில் சிக்கியிருக்கின்றனர் மீனவர்கள் ஆறு பேரும்...
இந்த அபாய கட்டத்தில் நல் வாய்ப்பாக, கரையில் இருந்து சுமார் 3 கீலோ மீட்டர் தூரத்தில் இருந்த எண்ணெய் தொழிற்சாலை ஒன்றின் கப்பல் இறங்குதளத்தில் தஞ்சம் புகுந்து அனைவரும் தப்பியிருக்கின்றனர்...
உயிர் பிழைத்து வந்த தங்களை, கப்பல் இறங்குதள கட்டடத்தில் இருந்தவர்கள் நன்றாக கவனித்தும், சாப்பாடு கொடுத்தும் காப்பாற்றியதாக கூறுகின்றனர்..
இந்நிலையில், கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் தகவல் கிடைக்கவே.. கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்..
எச்சரிக்கையை மீறி மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு கடலில் நேர்ந்த இந்த சம்பவமும், அவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியதும் கடலூர் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..