"படியில இருந்து விழுந்தேன்னு சொல்லுடா" பொய் சொல்ல சொன்ன டீச்சர்ஸ் -
திருப்பத்தூர் அருகே லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த வினோதா என்பவரது மகன், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி, மதிய நேரத்தில் வகுப்பறைக்கு ஆசிரியர் வராததால், முதல் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அதில் மாணவனின் தாடை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவரை ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்து பின்னர் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். மாணவனிடம் ஆசிரியர்கள் படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்ததாக பொய் கூறும்படி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மாணவனை தனியார் மருத்துவமனையில் பெற்றோர் பரிசோதித்தபோது, வாய் தாடை உடைந்து பற்கள் சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ய ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவச் செலவுக்கு பணம் பெற்றுத்தர வேண்டும் என்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.