இருதரப்பு மோதல்.. சேலத்தில் பதற்றமான சூழ்நிலை - குவிக்கப்பட்ட போலீஸ்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள், ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டு அடிக்கப் பாய்வது போன்ற வீடியோ வெளியானதை அடுத்து, நள்ளிரவில் இருபிரிவினரும் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
vovt
வாழப்பாடி அருகே உள்ள திருமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தையால் திட்டிக் கொள்வதுடன், மிரட்டுவது போன்ற வீடியோ, வாட்ஸ் அப் குழுக்களில் வைரலானது. இதையடுத்து, முன்னாள் மாணவர் மற்றும் சில மாணவர்கள் சேர்ந்து, வேப்பிலைப்பட்டியில் உள்ள மாணவன் மற்றும் அவருடைய உறவினர்களை தாக்கியதாகத் தெரிகிறது. தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீசார், இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மோதலை தவிர்க்க, 50-க்கும் மேற்பட்ட காவலர்கள், திருமனூரில் இருந்து வேப்பிலைப்பட்டி கிராமம் வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி அணிவகுப்பு நடத்தினர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அங்கு கூடுதலாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.