தாம்பரம் ரயில் நிலையம் - அதிர்ச்சி உண்மை அம்பலம் .. மாஸ்டர் பிளான் நிலை?
சென்னையின் 3வது ரயில் முனையமான தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு மாஸ்டர் ப்ளான் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி கிடப்பில் உள்ள நிலையில், இதன் முழு பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
கடந்த 2016ம் ஆண்டு சென்னையின் 3வது முனையமாக அறிவிக்கப்பட்ட தாம்பரம் ரயில் நிலையம், ஆண்டிற்கு 7.5 கோடி மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது...
அத்துடன் 2023-24ம் ஆண்டு வருமானமாக சுமார் 246.77 கோடி ஈட்டியிருந்தும், இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களின் மிக உயர்ந்த தர நிர்ணயமான NSG-1 இந்தியன் ரயில்வே அங்கீகாரத்தை பெற்று இருந்தும் அத்தியாவசிய வளர்ச்சியில்லாத சூழலே நிலவி வருகிறது..
தாம்பரம் ரயில் நிலையத்தில் நெடுந்தூரம் பயணம் செய்யும் 5,6,7,8,9 மற்றும் 10 உள்ளிட்ட பிளாட்பார்ம்களில் அடிப்படை தேவைகள் வழங்காமல் இருப்பதாக புலம்புகின்றனர் மக்கள்...
தாம்பரம் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணியான மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி ஆகஸ்ட் 2020ல் தொடங்கியது.
ஒப்பந்ததாரரான கிரேட்டிவ் குரூப் தயாரித்த மாஸ்டர் பிளானிற்கு 2021ம் ஆண்டு தெற்கு ரயில்வே முதன்மை ஒப்புதலை வழங்கிய நிலையில், அரசு மற்றும் தனியார், பங்களிப்பில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் EPC முறையில் தேர்ந்து எடுக்கப்பட்ட மற்ற ரயில் நிலையங்களுக்கு முதலில் முக்கியத்துவம் அளித்து தாம்பரம் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணி 2023ம் ஆண்டு வரை எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் மறுசீரமைப்பு பணிகள் 2 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது ஆர்டிஐ பதில் மூலம் தெரிய வந்துள்ளது
அதே வேளையில், தாம்பரம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு 2023 ஜனவரி மாதம், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பின், 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஆயிரம் கோடியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், டிசம்பர் 2024 ஆர் டி ஐ மூலம் கிடைத்த தகவலின் படி பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன்..
தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி தொடக்க நிலையிலேயே முடங்கியிருப்பதாக சுட்டிக்காட்டும் மக்கள், இனியும் காலம் தாழ்த்தாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்..