அன்று வீட்டோடு... எரிக்க முயற்சி... தப்பிய ஜெயிலர் ``மீண்டும்..'' - புழலில் கைதிகள் அட்டூழியம்
சென்னை புழல் மத்திய சிறையில் வழக்கமான சோதனை மேற்கொள்ள சென்ற போது ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விடுவோம் என கைதிகள் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... பொறுப்பு ஜெயிலர் மணிகண்டன் தலைமையில் சிறை காவலர்கள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அப்போது மணவாளன், கார்த்திக், இளந்தமிழன் ஆகிய மூவர் செல்போன் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்களது அறையை சோதனை மேற்கொள்ள சென்றனர். அவர்கள் ஜெயிலரை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலூர் சிறையில் பணியாற்றிய போது வீட்டில் வீசப்பட்டது போல தற்போது மீண்டும் உங்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என கைதிகள் மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயிலர் மணிகண்டன் இது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.