"எங்க பிள்ளைகளுக்காக உழைத்த ஆசிரியர் அவரின் மகளுக்கு நாங்களும் சொந்தம்தான்" நெகிழவைத்த ஊர் மக்கள்

x

எங்க பிள்ளைகளுக்காக உழைத்த ஆசிரியர்

அவரின் மகளுக்கு நாங்களும் சொந்தம்தான்"

சீர் வரிசையோடு படையெடுத்த ஊர் மக்கள்

ஆனந்த கண்ணீர் விட்ட அரசு பள்ளி ஆசிரியர்

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரின் இல்ல விழாவுக்கு ஊரே சேர்ந்து சீர் வரிசை கொண்டு வந்து அசத்தியுள்ளது... யார் அந்த பாசக்கார ஊர் மக்கள்?... இவ்வளவு பாசம் வைக்குமளவு அந்தத் தலைமை ஆசிரியர் என்ன செய்தார்?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி...

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் இவரை அறியாதவர்கள் மிகக் குறைவு...

பெயருக்கேற்றார்போல் சுற்றுப்புற கிராமக் குழந்தைகளின் வாழ்வில் ஜோதி ஏற்றியவர்...

கொளுத்தும் வெயிலோ...கொட்டும் மழையோ...தவறாமல் ஆஜராவார் பள்ளிக்கு...

அரசுப் பள்ளி என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் தான் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி...

அவல நிலையில் அரசுப் பள்ளிகளைப் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு இப்பள்ளி ஆச்சரியத்தைத் தான் தந்தது...

ஊர் மக்கள், தன்னார்வலர்கள் உதவியோடு பள்ளி வளாகத்தில் அழகழகான செடிகள்... ஏ.சி வகுப்பறைகள்... ஸ்மார்ட் போர்டு... கண்காணிப்பு கேமரா... தூய குடிநீர் குழாய்... குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள்... தபால் பெட்டி... குறைகள் இருந்தால் தெரிவிக்க புகார் பெட்டி... புத்தக அலமாரி... பொதி சுமக்கும் கழுதைகள் இல்லை குழந்தைகள் என்பதற்காக ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் எனும் முறை... சுவையான உணவு... என அடுக்கிக் கொண்டே போகலாம் ஜோதிமணி செய்து கொடுத்த வசதிகளை...

இவ்வளவு வசதிகளை செய்து கொடுத்த ஜோதிமணியைக் கல்வி தரும் கடவுளாய்ப் பார்க்கின்றனர் கிராம மக்கள்... தங்கள் பிள்ளைகளுக்காக காலமெல்லாம் உழைத்த இவரது மகள் சன்மதிக்குத் திருமணம் என்றதும் தங்கள் வீட்டுத் திருமணமாகவே கருதினர் ஊர் மக்கள்...

நிச்சயதார்த்த விழா வழக்கத்தை விட உற்சாகம் பூண்டது... வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு பகுதி மக்களும், பள்ளிக் குழந்தைகளும் புத்தாடை உடுத்தி... சீர் வரிசையுடன் நிச்சயதார்த்தத்திற்குப் புறப்பட்டனர்...

வாண வேடிக்கை விண்ணதிர... முக்கனிகள்...தாம்பூலத் தட்டுடன் மண்டபத்திற்குள் நுழைந்தனர்...

மணப்பெண்ணுக்கு சொந்தக்காரர்களாக இருக்குமோ என அதிசயித்துப் பார்த்தவர்களிடம், தாய் மாமன் சீர் கொண்டு செல்கிறோம் என இவர்கள் கூறிய பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது... சீர் கொண்டுவர ரத்த சொந்தமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்தி விட்டனர் இந்த கிராம மக்கள்...

உறவினர்கள் தானே இப்படி சீர் கொண்டு வர வேண்டும் என்று கேட்டவர்களை, ஜோதிமணியும் எங்களுக்கு உறவினர் தான் என்று ஊர் மக்கள் கூறியது அதீத அன்பிற்கு சாட்சி...

ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஏணியைப் போல் தாங்கி நின்று ஏற்றி விட்ட ஜோதிமணி ஊர் மக்கள் பாசத்தால் திக்குமுக்காடிப் போனார்...

பெறாத தந்தையாய்...உடன் பிறவாத சகோதரராய் ஜோதிமணியை கிராம மக்கள் தங்கத் தட்டில் தாங்குவது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது...


Next Story

மேலும் செய்திகள்