ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு-பேனர், தண்ணீர் டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல்
காலவாக்கம் சாலை ஓரத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ராஜலிங்கம், சுந்தரலிங்கம், உமா உள்ளிட்ட 3 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தனியார் நில உரிமையாளர் வெங்கடேசன் தனது இடத்திற்கு செல்ல போதிய இடம் இல்லாததால் அரசு நிலங்களில் சாலை ஓரம் குடியிருக்கும் குடியிருப்புகளை அகற்ற கூறி வந்ததாக தெரிகிறது. இது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வீடுகளை இடிப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் வந்தனர்... 60 ஆண்டுகளாக சாலை ஓரம் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றுவதற்கு முன்பு முறையான அளவீடு செய்ய வேண்டும் என்றும், மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் கூறி குடியிருப்புவாசிகள் வாக்குவாதம் செய்தனர். அப்போது ராஜலிங்கத்தின் மூத்த மகன் தினேஷ் ராட்சத பேனர் கம்பத்தின் மீதும் இளைய மகன் மாதேஷ் உயரமான தண்ணீர் டேங்க் மீதும் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.