பொங்கல் பரிசு தொகுப்பு - பேரிடியை இறக்கிய பெஞ்சல் புயல்
பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் கரும்புக்கு அரசு, கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இதுறித்து பார்க்கலாம்..விரிவகாக..
வரக்கூடிய 2025, ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம் பிடாகம், குச்சிப் பாளையம், நத்தமேடு, மரகதபுரம், அத்தியூர் திருக்கை, வேலியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தான், இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
ரேசன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் முக்கியமான இந்த கரும்புக்கு எந்த விதமான தட்டுப்பாடும் வராமல் இருக்க, இந்த பகுதி விவசாயிகள் இதனை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்த சூழலில், தமிழ்நாட்டையே புரட்டிப் போட்ட ஃபெஞ்சல் புயல், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிடப்பட்டு பக்குவமாக வளர்க்கப்பட்ட இந்த கரும்புகளையும் விட்டு வைக்கவில்லை.
இந்த புயலின் காரணமாக கடந்த 30, 1 ஆம் தேதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றும், தொடர் கனமழையும் ஒவ்வொரு ஏக்கரிலும் 40% முதல் 50% வரையான பன்னீர் கரும்புகளை சாய்த்து விட்டன, இருப்பினும், அப்படி அடியோடு சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி வைத்து மீண்டும் மண் அணைத்து பராமரித்தது உள்ளிட்டவைக்கு, 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவழித்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டுமே எதிர்பார்த்த லாபம் ஏதுமே கிடைக்காததாக குமுறும் விவசாயிகள், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரது தலையீடு இல்லாமல், அரசே கரும்பு ஒன்றுக்கு ரூ.25 முதல் ரூ.35 வரை அரசு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெஞ்ஜல் புயல் தாக்கத்தினால் 1,000-க்கும் மேலாக கிடைக்க வேண்டிய இடத்தில் 800 முதல் 900 கட்டுகள்தான் கிடைக்கும். இதனால், எங்களுக்கு பெரும் நஷ்டத்தோடு, கரும்புக்காக முதலீடு செய்த தொகைகூட கிடைக்குமா? எனத் தெரிய வில்லை என வேதனைப்படும் விவசாயிகள், அரசு சார்பில் கரும்புக்கு சற்று கூடுதல் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்தால் தான், செய்த முதலீடு பணத்தை ஆவது கண்ணில் காண முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள், வேளாண் துறையில் விண்ணப்பித்த நிலையிலும், கிடைக்காத நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டு முழுவதும் கஷ்டத்தில் உழன்று பொங்கலை தித்திக்கும் கரும்போடு கொண்டாட வைக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கு அரசு, உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே பலரது எதிர்ப்பார்ப்பும் கூட..!