பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் - சேலத்தில் பரபரப்பு
ஓமலூர் காவல் நிலையத்தில் முதன்மை காவலராக பணிபுரிந்து வருபவர் கலையரசன். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புதிய பேருந்து நிலையம் சென்றபோது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம், அவரோடு வந்த நபர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், கையை பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் கூச்சலிட்டதும், அருகில் இருந்தவர்கள் கலைச்செல்வனை பிடித்து, பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த பெண் எடுத்திருந்த வீடியோவை ஆய்வு செய்து, அத்துமீறியதை உறுதி செய்த போலீசார், கலையரசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் ஒருவரே அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.