காங். தலைவர்களுக்கு எலான் கொடுத்த அதிர்ச்சி செய்தி
மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை பற்றி குறிப்பிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமித்ஷா மாநிலங்களவையில் அம்பேத்கர் பற்றி உரையாற்றிய குறிப்பிட்ட வீடியோ காட்சிகளை காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். இதற்காக காங்கிரஸ் கட்சியும் அதன் சில தலைவர்களும் X தளத்தில் இருந்து நோட்டீஸ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடம் இருந்து அவர்கள் பகிர்ந்துள்ள வீடியோ பதிவை அகற்ற வேண்டும் எனவும் இது இந்தியச் சட்டத்தை மீறுவதாகும் எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனுப்பப்பட்ட நோட்டீஸ் குறித்து எக்ஸ் நிறுவனம் அல்லது உள்துறை அமைச்சகத்தில் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடம் இருந்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.