நீலகிரிக்கும் ஆபத்தா?.. 7 அடிக்கு பூமிக்குள் இறங்கிய கட்டடம்.. "பயத்தோட தான் வாழ்றோம்"
கேரள வயநாடு நிலச்சரிவு அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது நீலகிரியிலும் வீடுகள் மண்ணுக்குள் புதைந்து வருவது மக்களை பீதியடையச் செய்துள்ளது...
கூடலூர் கோக்கால் மலை அடிவாரம் கிராமத்தில் 20 நாள்களுக்கு முன்பு கனமழையால் 10 வீடுகள் மற்றும் அருகில் இருந்த முதியோர் காப்பகத்தில் லேசான விரிசல் ஏற்பட்டது. அடுத்த 5 நாள்களில் பிளவாக மாறி தரைத்தளம், சுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன... அரசு மருத்துவமனைக்கு சொந்தமான புதிய கட்டடம் கட்டுவதே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டிய நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்தனர்... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள மக்களை வெளியேற அறிவுறுத்தினர். முதியோர் காப்பகத்தில் இருந்தவர்கள் வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர்... இந்நிலையில் அங்குள்ள கட்டடங்கள், வீடுகள், மண்ணில் புதைந்து வருகின்றன... குறிப்பாக முதியோர் காப்பகத்தின் மிகப்பெரிய கட்டடம் 7 அடி ஆழம் வரை மண்ணில் புதைந்துள்ளது. நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்களும் அறிவித்துள்ள நிலையில் அரசு பொது மருத்துவமனையில் உள்ள ஒரு கட்டடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு அங்கிருந்த நோயாளிகள் வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டதும் அச்சத்தை அதிகரித்துள்ளது... அதிகாரிகள் குழு ஆய்வு செய்து மண்ணில் புதைந்து வரும் வீடுகளை சுற்றி தண்ணீர் வருவதால் ஒருவேளை பூமிக்கு அடியில் மிகப்பெரிய நீரோட்டம் இருக்கும் என தெரிவித்தனர். இருப்பினும் புவியல் துறை ஆய்வாளர்கள் நேரடியாக வந்து ஆய்வு செய்யும் பட்சத்தில் பாதிப்புகளின் தீவிரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.