``எங்க உயிர் போனா தான் முடிவு எடுப்பீங்களா'' கதறும் மக்களை காக்க வந்த `துணி'.. அட்ராசிட்டி `புல்லட்'ஐ விரட்ட இப்படி ஒரு பிளானா..! பரபரக்கும் நீலகிரி

x

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தூக்கத்தைத் தொலைக்க காரணம், இந்த புல்லட் யானை தான்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, இந்த புல்லட் யானை இங்குள்ள ஒவ்வொரு கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தும், வீடுகளை இடித்தும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சூறையாடி தின்று வருகிறது. அவ்வப்போது, சில மனிதர்களையும் இந்த யானை தாக்குவது உண்டு.

அப்படி, இந்த புல்லட் யானையால் வீடுகளையும் தங்களது உடைமைகளையும் இழந்து தவிக்கும் பொதுமக்கள் பலரும் நூலிழையில் நல்வாய்ப்பாக இதனிடம் இருந்து உயிர் தப்பியுள்ளனர்.

தொடர்ச்சியாக, இதுவரை 35 வீடுகளை இந்த யானை உடைத்துள்ள நிலையில், உடனடியாக யானை விரட்டக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததன் விளைவாக, புல்லட் யானையை விரட்டும் பணியில், சுமார் 80-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாகவே, முதலில் முகாம்களில் இருக்கும் மதம் பிடித்த யானைகளின் சாணத்தை தெளித்து புல்லட் யானையை விரட்ட செய்த முயற்சி பலன் அளிக்காததால், அடுத்ததாக, வேப்ப எண்ணெய் மற்றும் மிளகாய்ப் பொடியைக் கொண்டு புல்லட் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உணவுப் பொருட்களை மோப்பம் பிடித்து வரும் யானைக்கு, மிளகாய் பொடியின் வாசனை எரிச்சலை தரும் என்பதற்காகவே, வேப்ப எண்ணெயில் மிளகாய் பொடியை போட்டு வெள்ளை துணியோடு சேர்த்து வீடுகளின் முன்பு கட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

புல்லட் யானையை, எரிச்சல் அடைய வைத்து வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்ட இந்த புது யுக்தியை கையில் எடுத்திருப்பதாக தெரியவருகிறது.

பகலில் யார் கண்ணிலும் சிக்காமல், இரவில் மட்டும் வேட்டையாடும் புல்லட் யானையை விரட்ட முதுமலையில் பொம்மன், சீனிவாசன் ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடுங்க வைக்கும் குளிர் ஒருபுறம் இருக்க, உணவுப் பொருட்களைத் தேடிவந்து, வீட்டை உடைக்கும் புல்லட் யானை மறுபக்கம் என அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர். ஆகவே, அச்சுறுத்தும் புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்