புல்லட் யானையை விரட்ட வந்தது மதம் பிடித்த யானையின் சாணம் - நாற்றத்தை வைத்தே நடுங்கி ஓடும்
கடந்த 4 நாள்களுக்கு முன்பு தொடர்ச்சியாக வரை 28 வீடுகளை உடைத்து துவம்சம் செய்த புல்லட் யானையை விரட்டக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் குதித்த நிலையில் 80க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் 2 கும்கி யானைகளுடன் களமிறங்கினர்... ஆனால் நேற்று வனத்துறையின் கண்காணிப்பை மீறி எலியாஸ் கடை பகுதிக்குள் புகுந்த அந்த புல்லட் யானை அரசு தேயிலைத் தோட்ட குடியிருப்புக்குள் நுழைந்து 5 வீடுகளை உடைத்து வீட்டில் இருந்த டிவி மற்றும் பொருட்களை சேதப்படுத்தியது. நல்வாய்ப்பாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உயிர் பிழைத்தனர். அதே பகுதியில் புல்லட் யானை முகாமிட்டுள்ளதால் அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்கும் வகையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மதம் பிடித்த யானைகளின் சாணத்தை கொண்டு வந்துள்ள வனத்துறையினர், அதனை தண்ணீரில் கரைத்து யானை வரும் வழித்தடம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தெளித்து வருகின்றனர். அத்துடன் அந்த சாணத்தை வைத்து ஆங்காங்கே தீ மூட்டியும் யானை வருவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மதம் பிடித்த யானைகளின் சாணத்தின் நாற்றம் இருக்கும் பட்சத்தில் புல்லட் யானை அந்தப் பகுதிக்கு வராது என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் யானை நடமாடும் பகுதியில் சுழற்சி முறையில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியிலும் தீவிரமாக இறங்கி உள்ளனர்.